அடுத்த 4 நாட்கள் – தமிழக மழை நிலவரம் குறித்த வானிலை மைய அறிவிப்பு

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 19 அதிகாலை 3 முதல் 4.30 மணிக்குள் சென்னை, புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 5 இடங்களில் அதிகனமழையும், 37 இடங்களில் மிகக்கனமழையும், 66 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

அதிகபட்ச மழை அளவாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர் ஆகிய இடங்களில் தலா 22 செமீ, மணம்பூண்டியில் 21 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ,அழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இதன் காரணமாக 20 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இலேசான மழை பெய்யக் கூடும்.

21 ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

22, 23 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response