சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தை முன்வைத்து வன்னியர் சங்கம் மற்றும் பாமக ஆகிய் அமைப்புகள் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன்.
இந்நிலையில், கலைஞர்களின் படைப்புகளைக் கலைக் கண்ணோட்டத்துடன் அணுகவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
கலைஞர்களின் படைப்புகளை கலைக் கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும். வேறுவிதமாகப் பார்ப்பது கலையை நசித்துப் போகச் செய்யும்.
நடிகர் சூர்யா நடித்துள்ள “ஜெய்பீம்” படத்தில் உள்ள ஒரு காட்சிக்கு எதிராகச் சாதிய ரீதியில் எதிர்ப்புக் கிளம்பியவுடன் அக்காட்சி நீக்கப்பட்டப் பிறகும் அவருக்கு எதிராகப் போராடுவது சரியல்ல.
சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளும், அவமதிப்புகளும் எத்தகையது என்பதை அனைவரும் உணரவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட இப்படம் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மிகவும் பிற்பட்ட இருளர் சமுதாயத்திற்கு நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் நிதி அளித்திருப்பதையும், காவல் நிலையத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 15 இலட்ச ரூபாய் வழங்கியிருப்பதையும் பாராட்டாமல் அவருக்கு எதிராகப் போராடுவது கண்டிக்கத்தக்கதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.