திமுகவுக்கு எதிராகக் களமிறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருவட்டார் ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட். என்பவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், திமுக ஒன்றியச் செயலாளர் ஜான் பிரைட் மற்றும் அவரது நண்பர்கள் அடுமனை கிறிஸ்துவ இயக்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன்,காட்டாத்துறையை சேர்ந்த ஹென் சிலின் ஜோசப் உள்பட 8 பேர் சேர்ந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னைக் கற்பழித்து விட்டதாகக் கூறியுள்ளார்.

அந்தப் புகார் மனு மீது விசாரணை செய்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் திமுக ஒன்றியச் செயலாளர் ஜான் பிரைட் உள்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை,கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் ,திமுக ஒன்றியச் செயலாளர் உள்பட 8 பேரும் கைது செய்யப்படவில்லை.அதேநேரம், திருவட்டார் ஒன்றிய திமுக தலைவர் ராஜ் தலைமையில் தெற்கு ஒன்றிய திமுகவினர் ஆகஸ்ட் 11 அன்று திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.அதில் திமுக ஒன்றியச் செயலாளர் ஜான் பிரைட் மீது பொய்யான ஜோடிக்கப்பட்ட பாலியல் புகார் கொடுத்து அவரது பெயருக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இச்சிக்கலில் திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக ஒன்றியச் செயலாளருக்கு எதிராக உள்ளது.அக்கட்சியின் மாநிலக் குழுவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளுடன் நாகர்கோவில் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 13 அன்று மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை திமுக ஒன்றியச் செயலாளர் உள்பட 8 பேர் குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் புகார் கொடுத்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தும் அவர்கள் திமுகவினர் என்பதால் கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட புகார் கொடுத்த பெண்ணை ஒரு குற்றவாளி போல காவல்துறையினர் நடத்தி வருவதாகவும்,சம்மந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனகோரி மனு கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று, திருவட்டார் ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட் உட்பட 8 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்தும், அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டியும்
அவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்.

திமுகவின் கூட்டணிக்கட்சியே அக்கட்சிக்கு எதிராகப் போராடி வருவது கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response