தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் விடுத்துள்ள வேண்டுகோள….

கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும் நாட்டு மக்களையும் வாட்டி வதைத்து வருகிறது. மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு ஏற்படுத்தி வைத்துள்ள மருத்துவக் கட்டமைப்புகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள், நம் மருத்துவர்கள், செவிலியர்களின் தன்னலம் கருதாத சேவை ஆகியவற்றால் கரோனா 2 ஆவது அலையைக் கட்டுப்படுத்தி உள்ளோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. மக்கள்தொகை அதிகமாகவும், நெரிசலாக வாழும் சூழலும் உள்ள நாட்டில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது. அதற்கேற்ப பல நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறோம்.

ஊரடங்கு பிறப்பித்தால் குறையும் வைரஸ் பரவல், தளர்வுகள் அறிவிக்கப்படும்போது பரவத் தொடங்குகிறது. இதை கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும். கடைகளைத் திறக்க அனுமதித்தால் அங்கு வரும் மக்கள்,கொரோனா காலக் கட்டுபாடுகளைப் பின்பற்றத் தவறுகின்றனர். அதனால்தான் மக்கள் அதிக அளவில் கூட்டம் சேரும் இடங்களை மூடலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக மட்டுமே கடைகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதை உணராமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது. மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்பதை கொஞ்சம் கடுமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

முதல் அலையைவிட மாறுபட்டதாக 2 ஆவது அலை இருந்ததுபோல, அதை விடவும் மாறுபட்டதாக 3 ஆம் அலை இருக்கலாம். மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசியே சிறந்த ஆயுதம். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ளுங்கள். மிக மிக அவசிய, அவசரத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டைவிட்டு வெளியில் வாருங்கள். வரும்போது 2 முகக் கவசங்கள் பயன்படுத்துங்கள்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Response