தமிழ்நாட்டில் நூறு ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் விலை – மக்கள் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தினசரி விலை நிர்ணயம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பல்வேறு பொருட்களின் விலை அதிகரிப்புக்கு அடித்தளமாக அமைகிறது.

கடலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்பட பல மாவட்டங்களில் ஒரு இலிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தொட்டுவிட்டது. சென்னையைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு இறுதியில் ஒரு இலிட்டர் ரூ.86-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.98-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து வரலாறு காணாத உயர்வைச் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, நேற்றும் அதிகரித்து காணப்பட்டது.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரு இலிட்டர் 98 ரூபாய் 65 காசுக்கு விற்பனை ஆன பெட்ரோல், நேற்று இலிட்டருக்கு 23 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 98 ரூபாய் 88 காசுக்கு விற்பனை ஆனது. இப்படியாக விலை அதிகரித்து வரும் நிலையில், ஓரிரு நாட்களில் பெட்ரோல் விலை ரூ.99-ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வைப் போல, டீசல் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருவதைப் பார்க்க முடிகிறது. நேற்று முன்தினம் ஒரு இலிட்டர் டீசல் 92 ரூபாய் 83 காசுக்கு விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, இலிட்டருக்கு 6 காசு உயர்ந்து, ஒரு இலிட்டர் 92 ரூபாய் 89 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஏறுமுகத்திலேயே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, பெட்ரோல் இலிட்டருக்கு 2 ரூபாய் 89 காசும், டீசல் 2 ரூபாய் 77 காசும் உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக விலை அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், அரசாங்கம் கவலையே இல்லாமல் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.

Leave a Response