
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரையாற்றினார். பின்னர் அலுவல் ஆய்வுக் குழுவில் ஜூன் 24 வரை கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர், கேள்வி எழுப்பினர்.
இறுதியாக இன்று காலை பேரவை தொடங்கியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் வைத்த வாதம், எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை…..
நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்ற 100 ஆவது ஆண்டில் திமுக ஆட்சி அமைந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா. அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான். இந்த அரசு. இந்த அரசின் கொள்கைகளை தமிழகம் எட்டவேண்டிய இலக்கு, இந்த அரசின் தொலை நோக்கைத்தான் ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிக்கட்சியின் முதலாவது பிரதம அமைச்சர் கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார், காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த காமராஜர், தி.மு.கவைத் தோற்றுவித்து முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா, இந்தத் தமிழகத்தை 19 ஆண்டுகள் ஆட்சி செய்த முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் முதலமைச்சராக இருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும் நினைவு கூர்வது எனது கடமையாகும், நமது முன்னோர்களை நினைவுகூர்வது என்பது தமிழர் பண்பாடு ஆகும்.
இந்தக் கூட்டத்தொடரில் தி.மு.க, அதி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் 22 உறுப்பினர்கள் கருத்துகளை எடுத்து வைத்துள்ளார்கள். அவர்கள் வாதத்தை நான் ஆலோசனைகளாக எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நான் அண்ணாவின் அரசியல் வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞர் கொள்கை வாரிசு.
ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கைத் திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான் அதாவது ஆளுநர் உரை டிரெய்லர் தான். முழு நீளத் திரைப்படத்தைத் திரையில் காண்பீர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதைச் சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.
தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம், தற்போது‘இல்லை’ என்ற சொல்லே இல்லாமல் ஆக்கி இருக்கிறோம் இந்த ஆட்சியில்! கொரோனா தொற்றை அ.தி.மு.க அரசு கட்டுப்படுத்தியதாகக் கூறும் வாதம் மிக மிக தவறானது.
கடந்த காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டங்கள், இந்தியக் குடியுரிமைச் சட்டம், மீத்தேன்நியூட்ரினோ- கூடங்குளம் திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
தமிழ் நாட்டில் முதன்மையான நூறு திருக்கோவில்களைப் பழமை மாறாமல் புனரமைப்புச் செய்திடவும், திருக்கோவில் குளங்கள் மற்றும் திருத்தேர்களைச் சீரமைப்புச் செய்து, திருவிழாக்கள் நடத்திடவும் இந்த வருடம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறும்!
அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள். தி.மு.க யாராலும் அடக்க முடியாத யானை; நான்கு கால்கள் தான் யானையின் பலம். அதேபோல், தி.மு.க-வுக்கு சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப் பற்று ஆகிய 4 கொள்கைகள் தான் பலம்!.
கொரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமியின் கையை யாரும் கட்டி வைக்கவில்லை; நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்பதைப் போல பிப்ரவரி முதல் மே மாதம் வரை அவர் பணிகள் செய்ய மறந்துவிட்டார்.
கடந்த ஆட்சியிடம் கொரோனா தொற்று குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னேன்; ஏற்கவில்லை ஆட்சிக்கு வரப்போவதில்லை என அலட்சியமாக இருந்ததால்தான் கொரோனா தொற்று அதிகரித்தது.
தமிழகத்தில் போர்கால அடிப்படை நடவடிக்கைகளால், கொரோனா தொற்று 7 ஆயிரமாகக் குறைந்துள்ளது. கொரோனா 3 ஆவது அலை வந்தாலும், அதை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
வடமாவட்டங்களில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க திண்டிவனம் மற்றும் செய்யாறு பகுதியில் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும்.
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்படி 75,546 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.
இந்த உரையில் தொழில் வளர்ச்சி, வழக்குகள் திரும்பபெறல், கோயில்கள் புனரமைப்பு உள்ளிட்ட அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதனால் இவ்வுரையை மக்கள் பெரிதும் வரவேற்றுப் பேசிவருகின்றனர்.


