தமிழின அழிப்புக்காக சிங்கள அரசைத் தண்டிக்க தமிழக நீதிபதிகள் மனு – சிங்கள அரசு அதிர்ச்சி

ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் நடைபெறவிருக்கின்ற இந்தத் தருணத்தில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்கள அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமெனவும் உலகம் முழுவதிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக என்று கோரி,
ஐ.நா.விடம் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈழத்தமிழர்களின் நீதிகோரிய நெடும்பயணத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கையொப்பமிட்டு மனு ஒன்றை அனுப்பிவைத்திருப்பது வரலாற்றில் முதல் முறையாகும்.

இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் உறுப்பு நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜ.நா. பொதுச்செயலாளர், மனித உரிமை ஆணையாளர், உறுப்பு நாடுகள் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு 5 அவசர கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐந்து பேர் கையொப்பமிட்டு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம்,
நீதிபதி ஏ.கே. ராஜன் ,
நீதிபதி அரிபரந்தாமன்,
நீதிபதி அக்பர் அலி,
நீதிபதி சி.டி செல்வம்

ஆகிய ஐந்து நீதிபதிகளும் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் தமிழக நீதிபதிகளின் இந்த நடவடிக்கை புதிய நம்பிக்கையினைத் தரும் என்று அனைத்துலக நீதிக்கான தளங்களில் பணியாற்றும் ஆளுமைகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் அனுப்பிவைத்துள்ள மனுவில் இடம்பெற்றுள்ள ஐந்து கோரிக்கைகள்….

(1) இலங்கை அரசினை ஐ.நா பாதுகாப்புச் சபை மூலமாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

(2) இலங்கை அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத்தில் மீண்டும் பெரிய அழிவுகள் ஏற்படாத வண்ணம் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வழங்கவேண்டும்.

(3) தமிழீழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு குறித்தும், ஐ.நா மனித உரிமைகள் சபை, அறிக்கைகளினைத் தயாரித்துப் பன்னாட்டு அரசியல் தளங்கள் மற்றும் பன்னாட்டு நீதிமன்றங்களில் கையளிக்க வேண்டும்.

(4) ஐ.நா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் பிரிவு 4 கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவரினை நியமிக்க வேண்டும்.

(5) இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறப்புக் கூட்டத்தொடர் ஒன்றினை நடாத்த வேண்டும்.

இவ்வாறு ஐந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக நீதிபதிகள் இவ்வாறு கோரிக்கை மனு அளித்திருப்பது சிங்கள அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

Leave a Response