அடுத்து சத்திரிய குணத்தை வெளிப்படுத்துவோம் – மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று எழுதியுள்ள மடல்…..

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

இரு மாதங்கள்…. ஆறு கட்டப் போராட்டங்கள்… 9 நாட்கள் போராட்டக் களத்தில். ஒவ்வொரு நாளும் போராட்டக் களத்திற்கு திரண்டு வந்த சத்திரிய சொந்தங்களின் எண்ணிக்கை 10 இலட்சத்திற்கும் கூடுதல்.

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் வன்னியர் உள் இடப்பங்கீடாக தளர்த்திக் கொள்ளப்பட்ட கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டுப் போராட்டம் குறித்த வர்ணனை தான் மேற்கண்ட வரிகள். அது வர்ணனை மட்டுமல்ல… உண்மையும் கூட.

2020&ஆம் ஆண்டு திசம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் முதல் கட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்திற்கு திரண்டு வந்த வீர இளைஞர்களை தடுக்க பல்வேறு நிலைகளில் முயற்சிகள் செய்யப்பட்டன; காவல்துறையைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. புறப்பட்ட இடத்தில் தொடங்கி, சென்னையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு 30 கி.மீ முன்பாக வரை பல்வேறு நிலைகளில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். ஆனால், நமது பாட்டாளிகளும், இளைஞர்களும் காட்டாற்று வெள்ளத்தைப் போன்றவர்கள். அவர்களுக்கு அணை கட்ட முடியுமா என்ன? அனைத்துத் தடைகளையும் தகர்த்து சென்னையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பெருந்திரள் போராட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வந்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் நமது வலிமையை உணர்ந்தது. நமது சமூகநீதிக் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும் மக்கள் உணர்ந்து கொண்டார்கள். அந்தப் போராட்டம் அடுத்த மூன்று நாட்களுக்கு டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் தொடர்ந்து நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் திசம்பர் 14-ஆம் தேதி போராட்டம், திசம்பர் 23-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம், திசம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் முன் போராட்டம், ஜனவரி 7-ஆம் நாள் நகராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் என நமது போராட்டங்கள் தொடர்ந்தன. அவற்றின் தொடர்ச்சியாக நேற்று (ஜனவரி 29) தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களிடம் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயங்களின் நலனுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் போராடி வருகின்றன என்பதற்கான அங்கீகாரத்தை நேற்றையப் போராட்டத்தில் அனைத்து சமுதாயங்களும் நமக்கு வழங்கின.

பிராமணர்கள், தேவர்கள் (முக்குலத்தோர்), கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள், முதலியார்கள், நாயுடுகள், பிள்ளைமார்கள், யாதவர்கள், நாடார்கள், முத்தரையர்கள், 24 மனை தெலுங்கு செட்டியார்கள், தேவாங்கு செட்டியார்கள், குறும்பர்கள், வேட்டுவக் கவுண்டர்கள், போயர்கள், தேவேந்திரகுல வேளாளர்கள், அருந்ததியர்கள், உள்ளிட்ட பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அமைப்பு ரீதியாகவும், அமைப்புகளைக் கடந்து தனிநபர்களாகவும் அணி திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அச்சமுதாயங்கள் அனைத்திற்கும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளிலுள்ள வன்னியர் சொந்தங்களும் எனது அழைப்பை ஏற்று தங்களின் கட்சிக் கொடி ஏந்தி சமூக உரிமைக்காக போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுத்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்தத்தில் கடந்த திசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி இதுவரை நாம் நடத்திய 6 கட்ட போராட்டங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. இந்தப் போராட்டங்கள் சத்திரியர்களாகிய உங்கள் வீரத்தையும், கொள்கை உறுதியையும், துணிச்சலையும் வெளிப்படுத்தியுள்ளன. இந்தப் போராட்டங்களின் மூலம் நீங்கள் யார்? என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

அதேநேரத்தில் ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்….

நாம் இதுவரை நடத்தியிருக்கும் 6 கட்ட போராட்டங்களும் நமது இயல்பான போராட்டங்கள் அல்ல. அவை மனு கொடுக்கும் நிகழ்வுகள் தான். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்குங்கள் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோர் மூலமாக மனுக்களை அனுப்பி வைக்கும் பணியைத் தான் இதுவரை நாம் செய்திருக்கிறோம்.

அதிகாரப்பூர்வ போராட்டத்தை இன்னும் நாம் தொடங்கவில்லை. நாம் அளித்த இலட்சக்கணக்கான மனுக்கள் மீது முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று நான் நம்புகிறேன்.

நாம் போராட்டக் களத்தில் இருக்கும் போதே பல முறை நமது இளைஞர்கள் என்னை தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசினர். ‘‘அய்யா… சத்திரியர்களுக்கு என்று தனித்த போராட்ட குணம் உண்டு. ஆனால், இப்போது நாம் நடத்தியவை போராட்டம் அல்ல. இவை மனு கொடுக்கும் நிகழ்வுகள் தான். இவை எங்களுக்கு முழுமையான மனநிறைவை அளிக்கவில்லை. சத்திரியர்கள் குணத்திற்கு ஏற்றவாறு ஒரு போராட்டத்தை அறிவியுங்கள்’’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு கேட்கும் சத்திரிய சிங்கக் குட்டிகளுக்கு எல்லாம் நான் அளித்து வரும் பதில்,‘‘ அத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கான நாள் வரும். அதற்காக காத்திருங்கள்’’ என்பது தான்.

ஆனால், நாம் நடத்திய 6 கட்ட போராட்டங்களும் நமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்கனவே அனைவருக்கும் உணர்த்தி விட்டன என்று நாம் உறுதியாக நம்புகிறேன். அதனால் தான் நேற்றையப் போராட்டத்தில் எனது கோரிக்கையை ஏற்று மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சொந்தங்களும், சகோதர சமுதாயங்களும் அணி திரண்டு வந்திருக்கிறார்கள். இந்த உண்மைகள் எல்லாம் அரசுக்கு தெரியாமல் இருக்காது. நமது போராட்டத்தின் நியாயத்தை தமிழ்நாடு அரசும் உணர்ந்திருப்பதை அறிய முடிகிறது.

ஆகவே, நமது கோரிக்கையை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும்; அதனால் சத்திரியப் போராட்டத்திற்கு தேவை இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். அதையும் மீறி சத்திரியர்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அது சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். அந்தப் போராட்டத்தை நானே களமிறங்கி தலைமையேற்று நடத்துவேன். அதற்காக காத்திருங்கள்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response