எடப்பாடி பழனிச்சாமி ஜே.பி.நட்டா சந்திப்பு திடீர் இரத்து – தொகுதிப் பங்கீட்டில் இழுபறி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாசக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிகத் தொகுதிகளையும், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும் நிபந்தனை வைத்து வருகிறது.அதனால் அக்கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதே சந்தேகம் என்கிறார்கள்.

இன்னொருபக்கம், அதிமுக பாசக கூட்டணி உறுதி என்றாலும் தொகுதிப் பங்கீட்டில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லையாம்.

கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாசக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக, பாசக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டது.

இரண்டாம் கட்டமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தில்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பாரதிய சனதாக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று இரவு மதுரை வந்தார். இரவு 10.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு பாசக மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் சுற்றுச்சாலையில் உள்ள விடுதிக்குச் சென்றார். தொடர்ந்து இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு கட்சியினருடன் சென்று மாலை அணிவித்தார். இதையடுத்து ரிங்ரோட்டிலுள்ள அரங்கத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதற்கிடையே, மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மதுரை வந்துள்ளனர்.

இவர்கள், ஜோ.பி.நட்டாவைச் சந்தித்து கூட்டணி குறித்துப் பேசவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த சந்திப்பு திடீர் என்று இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கியம் காரணம் பாசக கேட்கும் தொகுதிகளுக்கு அதிமுக இன்னும் ஒப்புதல் கொடுக்காததுதான் என்று சொல்லப்படுகிறது.

இதனால் அதிமுக பாசக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள்.

Leave a Response