குடியரசு நாளில் தில்லி கலவரம் – பழ.நெடுமாறன் புதிய கோரிக்கை

தில்லி கலவரம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்….

தில்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக அமைதியாகவும், அறவழியிலும் போராடி வந்த விவசாயிகள், குடியரசுத் தினத்தன்று நடத்திய பேரணியில் வன்முறையில் ஈடுபட்டதாக இந்திய அரசு குற்றம் சாட்டுவது நம்ப முடியாததாகும்.

மேலும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் மீது கொலை முயற்சி, கலவரம் செய்தல், அரசு ஊழியரைப் பணியாற்றவிடாமல் தடுத்தல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குகளைத் தில்லி காவல்துறை பதிவு செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தில்லி உத்தரப்பிரதேச எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டிருப்பதையும், அங்கு அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அப்புறப்படுத்தும் முயற்சியிலும் உத்தரப்பிரதேச அரசு முனைந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தில்லியில் நடைபெற்ற கலவரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்கு, விசாரணை ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு முன்வரவேண்டும் என உச்சநீதிமன்றத்தை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response