பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணர் கோயில் கட்டவும், இதன் அருகே உள்ள மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டவும் பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடி, இந்நாட்டில் மதச் சிறுபான்மையினராக இந்துக்கள் வசித்து வருகின்றனர்.பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி 75 இலட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர்.
இருப்பினும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இவர்களுக்கு என்று இந்து கோயில்கள் எதுவும் கிடையாது. இந்நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்காக 2017 இல் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பால் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த இடத்தில் 20 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, அங்குள்ள தீவிரவாத இஸ்லாமிய மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், இப்பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. மேலும், இந்த இடத்தின் அருகே இந்துக்களுக்கான மயானமும் இடம் பெறுகிறது. இதற்கு சுற்றுச்சுவர் கட்டவும் தலைநகர மேம்பாட்டு ஆணையம் தடை விதித்தது.
பாகிஸ்தானின் பலம் வாய்ந்த ‘இஸ்லாமிய சிந்தாந்த குழு’வுக்கு, இந்தப் பிரச்னையை பாகிஸ்தான் மத விவகாரத் துறை அமைச்சர் நூரல் ஹக் கதாரி பரிந்துரை செய்தார். அதை பரிசீலித்த அந்தக் குழு, ‘பாகிஸ்தானில் எந்தவொரு மதத்தினரும் சுதந்திரமாக வாழலாம். அவர்கள் தங்களுக்கு வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கும், மயானம் அமைப்பதற்கும் தடையில்லை,’ என்று தெரிவித்தது.
இதையடுத்து, கிருஷ்ணர் கோயில் கட்டவும், மயானத்துக்குச் சுற்றுச்சுவர் கட்டும் பணியைத் தொடரவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தலைநகர மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்துத்துவ அமைப்புகள் பாகிஸ்தான் குறித்தும் இஸ்லாமிய மக்கள் குறித்தும் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அவர்களின் முகத்திலறையும் விதமாக இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.