தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – சிகிச்சை தராத சிங்கள அரசு

இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள மகசின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ – உணவு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லைஎனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் இத்தகைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராயுமாறு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயரதிகார அலுவலகத்தில் முறையீடு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது…..

நீண்டகாலமாகச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலருக்குத் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதிகளுக்கு உரிய உணவு வசதிகளோ மருத்துவ வசதிகளோ எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே, அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிடுமாறும் ஐ.நா.உயர்ஸ்தானிகராலயத்தைக் கோரியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response