சனவரி முதல் வீடுகட்டும் பணிகள் நிறுத்தம் – கட்டுமான சங்கம் அறிவிப்பு

இரும்புக் கம்பி மற்றும் சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கட்டுமானப் பணிகளை தமிழகம் முழுவதும் சனவரி முதல் நிறுத்த கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இது குறித்து அகில இந்திய கட்டுநர் சங்க (தமிழ்நாடு) மாநில பொருளாளர் ராம பிரபு கூறியதாவது….

சூலை மாதம் முதல் இரும்புக் கம்பி விலை 1 மெட்ரிக் டன் ரூ.20 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. தற்போது மெட்ரிக் டன் தலா ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் சனவரி மாதத்தில் மேலும், ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை உயர வாய்ப்புள்ளது.

அதேபோல சிமென்ட் ஒரு மூட்டை ரூ.330 இல் இருந்த நிலையில் தற்போது ரூ.100 வரை உயர்த்தப்பட்டு ரூ.430 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சாமானியன் வீடு கட்ட 20 சதவீதம் வரை கூடுதல் செலவு ஏற்படும். இந்தச் செலவில் அவர்களால் வீடு கட்ட முடியாது. இது தொடர்பாக நாங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தற்போது, முடியும் நிலையில் உள்ள பணிகள் மற்றும் அவசர கட்டுமானப் பணிகளை மட்டும் செய்து வருகிறோம். புதிய கட்டுமான வேலை எதையும் தொடங்கவில்லை.

வரும் சனவரி மாதம் முதல் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். கொரோனாவால் முடங்கியிருந்த கட்டுமானத் தொழில் தற்போது தான் மீண்டு வந்தது. மேலும், இப்போது தான் வெளிமாநிலத் தொழிலாளர்களும் வேலைக்கு வந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி இரும்பு கம்பி, சிமென்ட் விலையால் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியாத சூழலில் அனைவரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமபிரபு கூறியுள்ளார்

Leave a Response