அகிலமெல்லாம்
ஒரு பேச்சு
அற்புதத் தாய்
பெரு மூச்சு
பால் கொடுத்த
சில நாளில்
பசி தீர்க்க முடியலையே
அரும்பு மீசை வளர்வதை
அருகே இருந்து
பாக்கலையே
பத்து மாதக் கருவறையில்
பதுக்கி வச்சவன
முப்பதாண்டு சிறையறையில்
முடக்கி வச்சானுங்க
கல்லூரி அனுப்பவில்ல
கல்யாணம் பாக்கவில்ல
பேரக் கொழந்தையோட
பேச்சுவார்த்த நடத்தவில்ல
ஜன்னல் வழிப்
பாத்து பாத்து
கன்னமெல்லாம்
ஈரமாச்சு
இடுப்பு வலி
எறக்கி வச்சேன்
இதயம் இப்ப
பாரமாச்சு
ஒத்த தாயி ஏங்கிட்ட
ஊரே அழுவுதம்மா
ஆனாலும் ஏம்மவன
அதிகாரம் விழுங்குதம்மா
மன்றாடி ஏங்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்
காட்சி எல்லாம் மகன் தெரிய
கண் தொறந்தே தூங்குறேன்
புத்தாண்டில் எனக்கு
புதுப் பொடவ தேவையில்ல
சோத்துக்கு ஆக்காட்ட
சொந்த பந்தம் தேவையில்ல
பணங்காசுதான் கொடுக்க
பத்து பேரு தேவையில்ல
மண்புழுவா மெலிஞ்சாலும்
மருத்துவம் தேவையில்ல
ஒத்தையில நான் கிடந்து
ஒலகமே கருப்பாச்சி
மார்போடு சேராதோ
மகனென்னும் மரப்பாச்சி
பள்ளிக் கூடத்தில்
பகலெல்லாம் தங்கி வந்தான்
புள்ளி வைக்காத
மான் போல துள்ளி வந்தான்
வெள்ளி அன்னாகயிறில்
வீதியெல்லாம் சுத்தி வந்தான்
இப்ப –
தள்ளி வச்சிட்டீங்க
தருவீங்களா ஏம்மவன – எனக்கு
கொள்ளி வைக்கவாச்சும்
கொடுங்கய்யா ஏம்மவன…
– கபிலன்