சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.
கைதுக்குப் பின் அவருக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை நடந்தது.தற்போது அவர் நீதிமன்றக் காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை விசாரணைக்காக எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று அமலாக்கத்துறை நீதிமன்றங்களில் முறையிட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீடு, அவரது கிரானைட் நிறுவனம், செங்குந்தபுரத்தில் மற்றொரு நிறுவனம் என 5 இடங்களில் துணை இராணுவத்தினரின் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2-வது முறையாக நேற்று சோதனை நடத்தினர். இதில், சங்கரின் வீட்டில் இருந்து 2 பைகளில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல, கோவை இராமநாதபுரம் மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் முத்துபாலன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் வீட்டிலும் நேற்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இது, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தினருக்கு புதிதாக பங்களா கட்டிக் கொடுத்து வரும் நிறுவனம் என்று கூறப்படுகிறது. இந்தச் சோதனை மாலை வரை நீடித்தது.
செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் வீரா.சாமிநாதனின் வீடு, அலுவலகம், பண்ணை இல்லத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கரா நகர் ராஜாஜி தெருவில் உள்ள இவரது உறவினர் டயர் மணி (எ) காளியப்பன் வீட்டில் 12 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும் ஆய்வு நடத்தப்பட்டது.
ஒருபக்கம் விசாரணைக்காக செந்தில்பாலாஜியை ஒப்படைக்கோரிக் கொண்டே இன்னொரு பக்கம் தொடர்ச்சியாக சோதனைகளை நடத்திக் கொண்டே இருக்கிறது அமலாக்கத்துறை.
இவ்வளவு நாட்களாக பல்வேறு சோதனைகளை நடத்தியும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்பதால் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்துகிறார்கள். இதிலிருந்தே அமைச்சர் செந்தில்பாலாஜி விசயத்தில் அமலாக்கத்துறை சட்டப்படி நடந்துகொள்ளவில்லை என்பது புலனாகிறது. ஆளும் கட்சிக்கு அடியாள் வேலை செய்யும் நிறுவனமாக அது இருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் உறுதியாகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.