மக்கள்கவி கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது – தநா அரசு அறிவிப்பு

தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான விருதாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது….

தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு புலவர் மு.படிக்கராமுவும், 2024 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதுக்கு எல்.கணேசனும், மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் பொன்.செல்வகணபதியும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதுக்கு மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்தும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.2 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார்கள்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதுக்கு விடுதலை ராஜேந்திரனும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.5 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார்கள்.

மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் விருதுக்கு முத்து வாவாசி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.10 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார்.

இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் திருவள்ளுவர் திருநாளான சனவரி15 ஆம் தேதியன்று சென்னையில் வழங்கப்படவுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response