உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் பரவி ஐந்து ஆண்டுகளாகின்றன.அது சீனாவிலிருந்துதான் தொடங்கியது.இந்நிலையில், தற்போது சீனாவில் மனிதர்களைத் தாக்கும் புதிய வகை வைரசான மெட்டா நியூமோ வைரஸ் (எச்.எம்.பி.வி) வேகமாகப் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் விளைவாக சீனாவின் முக்கிய நகரங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் தகன மேடைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் இந்தக் கிருமித் தொற்று குறித்து இந்தியர்கள் அச்சப்படத் தேவையில்லை என பொது சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பொது சுகாதார இயக்குநர் ஜெனரல் அதுல் கோயல் கூறியதாவது….
சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது என்று செய்திகள் வந்துள்ளன. நாங்கள் அப்படி நினைக்கவில்லை. நான் தெளிவாகச் சொல்கிறேன். இது சுவாச வைரஸ் போன்றது. இந்த வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை பெரும்பாலும் பெரியவர்களுக்கும் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஏற்படுத்துகிறது.
குளிர்காலத்தில் சுவாசக் கோளாறுகள் பொதுவானவை. அவற்றைச் சமாளிக்க இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன. மருந்துகள் தேவையில்லை, ஏனெனில் இதற்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இல்லை. சீனாவில் பரவும் இந்தக் கிருமித் தொற்று குறித்து இந்தியர்கள் அச்சப்படத் தேவையில்லை. இது சாதாரண காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்தான். இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த தொற்று பாதிப்ப்பு ஏற்படவில்லை என விளக்கம் அளித்தார்.
இது வழக்கமான ஒரு நோய்த் தொற்றுதான் என்று சீனாவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.