முடிசூடா முதல்வன் மு.க.ஸ்டாலின்! – கபிலன் கவிதை

 

உடன்பிறப்பு முழக்கத்தின் உயிரே; ஏழை
உலைகொதிக்க பசியாற்றும் வயிறே; இன்று
கடன்பட்ட தமிழ்மண்ணை விளைச்சல் செய்து;
கண்ணீரை நீர் பாய்ச்சும் மழையே;மக்கள்
இடர்பட்டு சுடர்விட்டு வெளிச்சம் வீச
இடப்பக்கம் இதயம் போல் துடித்தாய்;இன்று
அடிப்படையே தானமென என்று எண்ணி
அல்லலுறும் வறுமைக்கு அள்ளித் தந்தாய்;

 

தொலைக்காட்சிப் பேரணியை விழியால் ஏற்று
தோள் கொடுத்து தோழமையைச் சுற்றி வந்தாய்
அலைபோல ஆர்ப்பரித்து முழக்கம் கொண்டு
அரசுக்கே ஆள்கின்ற உதவி செய்தாய்
விலைவாசி ஏற்றத்தில் வீழ்ந்த மக்கள்
வீட்டுக்கே இலவசத்தை விருந்து வைத்தாய்
தலைபோனால் எனக்கென்ன என்று சொல்லி
தமிழ்மானம் ஒன்றேதான் உரிமை என்றாய்

 

முகமூடி கவசங்கள் அள்ளித் தந்தாய்
முகவுரையாய் வாழ்வதற்கு சொல்லித் தந்தாய்
பகையரசு என்றெல்லாம் கவலை இன்றி
பகலிரவாய் ஏழைகளீன் பசியை வென்றாய்
புகலிடமாய் கல்யாண மண்டபத்தை
பொதுமக்கள் மருத்துவமாய் மாற்றச் சொன்னாய்
தகவலுக்கு எத்தனையோ வரலாறுண்டு
தளபதியின் புன்னகையோ நெருப்புத்துண்டு

 

தமிழ்நாடே தன் தொகுதி என்று எண்ணி
தண்ணீரில் சுழல் போல சுற்றி வந்தாய்
உமிழ்நீரை விழுங்குதற்கும் நேரமின்றி
ஊரெல்லாம் உரையாடி நடந்தாய்;ஏழை
சிமிழ்விளக்கை சூரியனாய் மாற்ற வேண்டி
சிரிப்பென்ற தீபத்தை ஏற்றிச் சென்றாய்
அமிழ்துக்கு நிகரான தமிழர் மண்ணை
அரியணையில் உட்கார நிமிர்ந்து நின்றாய்

 

கொள்ளைநோய் ஒருநாளில் கடந்துபோகும்
குலமக்கள் நலவாழ்வு இரண்டாம்பாகம்
பிள்ளைக்கும் முதுமைக்கும் உறவு நீளும்
பெயருக்கு முன்னாலே பெருமை சேரும்
எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கும்;அந்த
எதிர்காலம் எப்போது பிறக்கும்;நாளை
முள்மீது ரோஜாப்பூ பூக்கும்;அன்று
முடிசூம் தளபதியை உலகம் ஏற்கும்!

நன்றி – முரசொலி 25.042020

Leave a Response