கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தினரை இழுக்கும் பாசக – காரணம் என்ன?

தமிழக பாசக துணைத் தலைவராக இருந்த வானதி சீனிவாசன், பாசகவின் அகில இந்திய மகளிர் அணித் தலைவராக கடந்த 28 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். நேற்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள பாசக தலைமை அலுவலகத்துக்குச் சென்றார்.அங்கு தேசிய மகளிர் அணித் தலைவர் அறைக்குச் சென்று அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு முறைப்படி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்பின் அவர் பாசகவின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பதவியேற்பதற்காக டெல்லி சென்ற வானதிசீனிவாசனுடன் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் உடன் சென்று பாசகவில் இணைந்துள்ளனர்.

கொங்குவேளாளக் கவுண்டர்களின் அடையாளமாகக் கொண்டாடப்படும் தீரன்சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சித் தொடராக உருவாக்கியவரும் நாம் தமிழர் கட்சி சீமானுடன் நெருக்கமாக இருந்தவருமான கொங்குசெங்கோட்டையன் பாசகவில் இணைந்ததோடு கொங்கு மண்டலத்திலுள்ள முக்கிய கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்களை பாசகவில் இணைக்கும் வேலையைத் தொடங்கியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அந்த சமுதாயத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சராக இருக்கிறார். அதோடு வருகிற தேர்தலிலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அவரே அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் காவலதிகாரி அண்ணாமலைக்கு பாசகவில் முக்கியப் பொறுப்பு கொடுத்ததுடன், நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் மனைவி குஷ்புவை பாசகவில் இணைத்தனர்.

அதன்பின்ன்ர் அதே சமுதாயத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு அகில இந்திய அளவில் முக்கியப் பொறுப்பு கொடுத்துள்ளனர். அவரும் கொங்குசெங்கோட்டையன் உட்பட ஏராளமானோரை பாசகவில் இணைத்துவருகிறார்.

இதனால், கூட்டணியில் இருக்கும் அதிமுகவை பலவீனப்படுத்தும் வேலையை பாசகவே செய்துவருகிறது என்கிற விமர்சனங்கள் வருகின்றன.

இன்னொரு பக்கம் அதிமுகவைப் பிடிக்காத கவுண்டர் சமுதாயத்தினரை மட்டுமே தேடித்தேடி பாசகவில் சேர்க்கின்றனர் என்றும் இதன்மூலம் கொங்குமண்டலத்தில் திமுகவை பலவீனப்படுத்தலாம் என்கிற கணக்கின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்கின்றனர் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response