
நேற்று,கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது,மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் வழங்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது.அதற்கு,
பீகாரில் பத்தாயிரம் ரூபாய் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டது.அதை தேர்தல் ஆணையம் தவறு எனக் கூறவில்லை. அது ஒரு அரசின் திட்டமாகக் கொண்டுவரப்பட்டது.மகாராஷ்டிராவில் ரூ.2100 கொடுக்கப்பட்டது.அதையும் தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை.பெண்களுக்கு செல்லக்கூடிய எந்தப் பணத்தையும் யாரும் தடுப்பதில்லை. எங்களின் கூட்டணி 2000 ரூபாயை அறிவித்துள்ளது.தேர்தல் முடிந்த பிறகு இதைவிட அதிகமான பணத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் கொடுப்பார்கள் என்றார்.
காங்கிரசு பாமஉ ஜோதிமணி குறித்து பாஜக கரூர் மாவட்டத் தலைவர் பேசியது தொடர்பான கேள்விக்கு…, ஜோதிமணி மீது 1008 கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனிமனித விமர்சனத்தை யாராக இருந்தாலும் வைப்பது ஏற்புடையது அல்ல.நேற்று கரூர் மாவட்ட பாஜக தலைவரை தொலைபேசி மூலம் அணுகி என்னுடைய கருத்தைத் தெரிவித்தேன்.ஜோதிமணியையும் செல்போனில் தொடர்பு கொண்டேன்.ஆனால்,அவர் செல்போனை எடுக்கவில்லை.அவர் என்னைத் தொடர்பு கொள்ளும்போது எனது வருத்தத்தை தெரிவிப்பேன்.ஆரோக்கியமான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்று என் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன் என்றார்.
நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா பற்றி பேசி இருந்தது தொடர்பான கேள்விக்கு….,
நேற்று அவர் வருத்தம் தெரிவித்துவிட்டார்.அத்துடன் அந்த விசயம் முடிந்து விட்டது.அரசியலில் நாம் செய்வது எதிர்க்கட்சிக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.அவர்கள் செய்வது நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால்,அதற்காக நாம் விமர்சிக்கும்போது நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தையின் கணம் என்று ஒன்று உள்ளது.அவர் பேசும்போது சமூக வலைத்தளங்கள் பத்திரிகை செய்திகளில் உடனே வெளியாகிறது.எனவே அவ்வாறு பேசக்கூடாது என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.
இந்தப் பேட்டியில் சொந்தக் கட்சியினர் செய்தது சரியில்லை என பொதுவெளியில் பேசியிருப்பது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


