அமித்சாவை புறக்கணித்த அண்ணாமலை – பாசக பரபரப்பு

ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாசக மூத்த தலைவருமான அமித்ஷா, நேற்று முன்தினம் இரவு 11.05 மணிக்கு தில்லியில் இருந்து திருச்சி விமானநிலையம் வந்தார். விமானநிலையத்தில் அவரை தமிழ்நாடு பாசக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்ததலைவர் பொன்.இராதாகிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

பின்னர், இரவு 12 மணிக்கு திருச்சியில் உள்ள விடுதியில் தங்கினார். நேற்று காலையில் அவர் புதுவை மாநிலம் காரைக்கால் சென்று பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் மீண்டும் திருச்சி வந்து மாலை 6 மணிக்கு தில்லி புறப்பட்டுச் சென்றார்.அப்போது அவரை நயினார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

ஆனால், உள்துறை அமைச்சரை வரவேற்கவோ, வழியனுப்பவோ முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவில்லை. அமித்ஷா வருகை குறித்து அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் வேண்டும் என்றே அமித்ஷாவின் வருகையைப் புறக்கணித்துள்ளார்.

இது பாசகவினரிடையே கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பாசகவினர் மத்தியில் உலவும் தகவல்…

மாநில தலைவர் பதவியைப் பறித்தது முதல் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். அதிமுக, பாசக கூட்டணியை வரவிடாமல் தடுக்க முயன்றார்.முடியவில்லை.இதனால் இந்தக் கூட்டணி பல இடங்களில் தோற்க தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அண்ணாமலையால் கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட அமமுக, பாமக, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வரும் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அதில் பாமகவை அமித்ஷா அழைத்ததால் அவர்கள் வந்தனர். அமமுகவை மட்டும் அவர் அழைத்து வந்தார். இந்நிலையில் தனக்கு தேசிய அளவில் பதவி வழங்கவேண்டும்.இல்லாவிட்டால் வெளிமாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்து ஒன்றிய அமைச்சராக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரை பிரதமர் மோடி,அமித்ஷா ஆகியோர் கண்டுகொள்ளவில்லை.இதனால் கடும் அதிருப்தி அடைந்தார்.

தமிழ்நாடு பாசக சார்பில் நடத்தப்படும் கூட்டத்துக்கு அழைத்தும் அவர் வராமல் இருந்தார். பல கூட்டங்களுக்கு அவர் வராததால், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், அவரை அழைத்து சத்தம் போட்டார். இதனால் ஒரு வாரத்துக்கு முன்னர் நடந்த கூட்டத்துக்கு வந்தார்.

ஆனால் தற்போது அமித்ஷாவை வரவேற்க அவர் வரவில்லை.அதேநேரத்தில் அண்ணாமலை நேற்று சென்னையில் இருந்தார்.சென்னையில் கட்சி அலுவலகத்தில் மாநில நிர்வாகிகளுடன் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.இந்தக் கூட்டத்துக்கும் அண்ணாமலை வரவில்லை.நேற்று சென்னையில் இருந்தும் கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்தார்.

பாசகவில் உச்சபட்சத் தலைவராக இருக்கும் அமித்ஷாவையே அண்ணாமலை புறக்கணித்திருக்கிறார் என்பது சாதாரண செய்தியல்ல.எனவே, அவர் வேறு முடிவு எடுத்துவிட்டாரோ? என்கிற பரபரப்பு தமிழ்நாடு பாசகவில் நிலவுகிறது.

Leave a Response