இராகுல் குற்றச்சாட்டு உண்மைதான் – ஒப்புக்கொண்ட பியூஷ் கோயல்

அண்மையில் நடைபெற்றிருக்கும் இந்திய அமெரிக்க வர்த்தக் ஒப்பந்தம் இந்திய விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கக்கூடியது என்று காங்கிரசு மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி தொடர்ந்து கூறிவருகிறார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில்…

18% வரி மற்றும் 0% வரி. (அதாவது இந்தியாவுக்கு 18% வரி, வங்கதேசத்துக்கு 0% வரி) பொய் சொல்வதில் வல்லுநர்களான பிரதமரும் அவரது அமைச்சரவையும் இந்த விசயத்தில் எவ்வாறு குழப்புகிறார்கள் என்பதை நான் விளக்குகிறேன்.

அதோடு, இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் பருத்தி விவசாயிகளையும் ஜவுளி ஏற்றுமதியாளர்களையும் அவர்கள் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள்? என்பதையும் விளக்குகிறேன்.

வங்கதேசம் ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கு அமெரிக்கா 0% வரியை விதிக்கிறது. இதில் ஒரே நிபந்தனை அது அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்யவேண்டும் என்பதாகும்.

இந்திய ஆடைகளுக்கு அமெரிக்கா 18% வரி வதிக்கிறது. இதுகுறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, “நாமும் அதே நன்மைகளைப் பெற விரும்பினால், நாமும் அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்யவேண்டும்.” என்று ​மோடி அரசாங்கத்தில் உள்ள ஓர் அமைச்சர் பதிலளித்தார். ஆனால், அதுவரை இந்த விவகாரம் ஏன் நாட்டு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது?

இது என்ன வகையான கொள்கை? உண்மையில் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறதா? “முன்னால் சென்றால் கிணறு,பின்னால் சென்றால் பள்ளம்” என்ற சூழ்நிலைக்குள் நம்மைச் சிக்கவைக்கும் ஒரு பொறியா?

நாம் அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்தால், நமது சொந்த விவசாயிகள் அழிந்து போவார்கள். நாம் பருத்தியை இறக்குமதி செய்யாவிட்டால், நமது ஜவுளித் தொழில் அழிந்து போகும்.

ஜவுளித் தொழிலும்,பருத்தி சாகுபடியும் இந்தியாவின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகும்.கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அவற்றைச் சார்ந்துள்ளது.இந்தத் துறைகளை சேதப்படுத்துவது என்பது கோடிக்கணக்கான குடும்பங்களை வேலையின்மையிலும்,பொருளாதார நெருக்கடியிலும் தள்ளிவிடும்.

தொலைநோக்குப் பார்வையும் தேசிய நோக்கமும் கொண்ட அரசாங்கமாக இருந்திருந்தால்,பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருவரின் நலன்களையும் பாதுகாக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கும்.

ஆனால் இதற்கு நேர்மாறாக,மோடியும் அவரது அமைச்சர்களும் இருதுறைகளுக்கும் ஆழமாக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தச் சிக்கல் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ்,வங்கதேசத்துக்கு அமெரிக்கா வழங்கும் சலுகைகள் இந்தியாவுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.அமெரிக்கப் பருத்தியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு அமெரிக்கச் சந்தையில் பூஜ்ஜிய வரியை நாமும் பெறமுடியும்.இதுதொடர்பான ஒரு பிரிவும் வர்ததக ஒப்பந்தத்தில் இருக்கும் எனக் கூறி இருந்தார்.

இராகுல் காந்தியின் குற்றச்சாட்டு உண்மை என்பதை ஒன்றியஅரசு ஓப்புக்கொண்டது என்பதற்கான சான்றாக இது இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response