அமலாக்கத்துறையின் ஆதிக்கம் – செந்தில்பாலாஜியின் சிறைவாசம் தொடருகிறது

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், ஜூன் 14 ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வரை சிறையிலிருக்கிறார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை, ஆகஸ்ட் 12
ஆம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்குப் பிணை வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாகக் குணமடையாத சூழலில், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அக்டோபர் 16 அன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையைக் குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்தார். மருத்துவ அறிக்கையில், “செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமித்து அவரது உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம்.

வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடியே 34 இலட்சம் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் 10 ஆண்டுகளில் வங்கிக் கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.வருமான வரிக் கணக்குகளையும் தாக்கல் செய்துள்ளார். இதில், இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகிறது. எனவே, இந்த வழக்கில், அவர் உள்நோக்கத்துடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 67 கோடியே 75 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும். செந்தில் பாலாஜிக்கு அதுபோன்ற நிலை ஏறபடவில்லை.

செந்தில் பாலாஜியின் கால் மரத்துப் போவது சமீபத்தில் ஏற்பட்டது அல்ல. அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சினை இருந்து வருகிறது. மருத்துவச் சிகிச்சைக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கெனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளிலும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எனவே, இந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளைக் கலைத்து விடுவார்” என்று வாதிட்டார்.

அவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், `மருத்துவக் காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது’ எனக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.

மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

அதனால், நான்கு மாதங்களுக்கும் மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சிறைவாசம் தொடருகிறது.

Leave a Response