நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும் – சசிகலா பேச்சு

அதிமுகவின் 52 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை வேளச்சேரியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட சசிகலா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாணவர்களுக்கான மடிக்கணினி , மாவு அரைக்கும் இயந்திரங்கள், கரும்புச்சாறு தயாரிக்கும் இயந்திரம், மருந்து அடிக்கும் இயந்திரம், சிறிய வின்ச் இயந்திரம் முதலிய பல்வேறு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சசிகலா பேசியதாவது….

51 ஆண்டுகளுக்கு முன்பாக மக்களுக்கு நல்லது செய்வதற்காக இதே நாளில் அதிமுக வைத் தோற்றுவித்தார்
எம்.ஜி.ஆர். அவரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி, இப்பொழுது எதிர்க்கட்சியினர் பார்த்து நகைக்கும் வகையில் உள்ளது வருத்தம் தருகிறது.

திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார்கள். குற்றம் செய்பவர்கள் பெரும்பாலும் திமுக கட்சியினர்களாக இருப்பதால் காவல் துறையால் முறையாகச் செயல் பட முடியவில்லை. ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட மடிக்கணினி திட்டம் இன்று இந்த திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

காங்கிரசுடன் கூட்டணியில் இருந்துகொண்டு காவேரியில் தண்ணீர் பெறாமல் விவசாயிகளைக் கஷ்டப்படுத்துகிறது திமுக. கச்சத்தீவை மீட்போம் எனக் கூறி ஏமாற்றுகிறது. மீனவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று கூறி இன்னும் கட்டித் தரவில்லை. ரேசன் கடைகளில் சர்க்கரை 1 கிலோ ஏற்றித் தருவதாகக் கூறிய திமுக அரசு இதுவரை தரவில்லை. பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பதாகக் கூறி குறைக்கவில்லை திமுக. நாள்தோறும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் மக்கள்.

திமுக வின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஓன்றிணைந்து வெற்றி பெறும். அதற்கான வேலைகளை நான் பார்த்து வருகிறேன்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

Leave a Response