டிடிவி தினகரன் கறிக்கோழி ஓபிஎஸ் படம் ஓடாது – பங்கம் செய்த வைகைச்செல்வன்

நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கரை ஆதரித்து அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் தேர்தல் பரப்புரை செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது…..

நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முனைப்பு காட்டியது. ஆனால் எடப்பாடியார் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமியை மிரட்டியது. அதிமுகவை இரண்டாக உடைப்போம். அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவோம். அதிமுகவினரை தூக்கி விடுவோம் என்று எல்லாம் மிரட்டினர். ஆனால் எடப்பாடியார், எம்ஜிஆர் வழியைப் பின்பற்றி எதற்கும் அஞ்சாமல் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை.

பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கூட்டணிக் கட்சித்தலைவரான பாரிவேந்தர் பூரி வேந்தர். அந்தக்கட்சியின் தலைவர் அவரே. உறுப்பினர் அவரது மகன்.

ஏ.சி சண்முகம் கட்சிக்கு அவரே தலைவர், அவர் டிரைவர் அந்தக்கட்சியின் உறுப்பினர். அதுபோல ஜான்பாண்டியன் அவரே தலைவர். அவரே உறுப்பினர். நடிகையாக இருந்தும் ராதிகாவைப் பார்க்கக்கூட யாரும் வரவில்லை. இதனால் அவர் பிரசாரம் செய்வதை நிறுத்தி விட்டார். டிடிவி தினகரன் கட்சி நடத்தவில்லை. கம்பெனி தான் நடத்துகிறார். அமமுக கட்சி என்பது கறிக்கோழி போன்றது. அது தின்று கொழுத்து போகுமே தவிர குஞ்சு பொறிக்காது.

பாஜக கடந்த 10 ஆண்டு காலத்தில் ஊழல் செய்யாமல் ஆட்சி செய்துள்ளது என டிடிவி தினகரன் பேசுகிறார். ஆனால் அவர், சின்னத்துக்காக ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றவர். இதனால் அவர் பாஜகவிற்கு நல்ல சான்று கொடுப்பது கேலிக்கூத்தானது. பாஜகவின் ரெய்டுக்கு பயந்து இரண்டு சீட்டு பெற்று கொண்டவர். குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தேர்தலில் டெபாசிட் இழப்பார்.

பலாப்பழம் சின்னத்தில் நிற்கும் ஓ.பன்னீர்செல்வம் எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் விஸ்வரூபம் எடுப்பேன் என கூறிக்கொண்டு வாக்குச் சேகரிக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் விஸ்வரூபம் படம் எடுத்தாலும் சரி, பாபநாசம் படம் எடுத்தாலும் சரி, அந்தப்படம் தமிழகத்தில் ஓடாது.

தமிழ்மாநில கங்கிரசுக் கட்சியின் தொண்டர்கள் அவர் வீட்டில் சமையல்காரர்கள். அதிமுக கழற்றி வீசிய கோவணம் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கழுத்தில் அங்கவஸ்திரமாக உள்ளது.

இப்படி இருக்கும் போது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பருப்பு தமிழகத்தில் வேகாது. நோட்டாவுக்கு கீழே பாஜக செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒட்டுமொத்த பாஜக கூட்டணிக்கட்சிகளையும் பங்கம் செய்த வைகைச்செல்வன் பேச்சுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

Leave a Response