எடப்பாடியை ஏமாற்றிய ஈரோடு வேட்பாளர் – அதிமுகவினர் கடும் அதிருப்தி

18 ஆவது மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் என்பவர் போட்டியிடுகிறார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தோடு அருகே காலிங்கராயன்பாளையம் அண்ணா நகரில் தனியார் குடோனில் பறக்கும் படை மார்ச் 21 ஆம் தேதி சோதனை நடத்தினர். இதில் குடோனில் 24,150 சேலைகள் 161 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதிமுக வேட்பாளர் அசோக்குமாருக்காகப் புடவைகள் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆற்றல் அசோக்குமார் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலைகளை வாங்கி குடோனில் பதுக்கியது விசாரணையில் தெரிய வந்தது. வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அசோக்குமார் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையாளர் பாக்கியலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் குடோனுக்கு வைத்த சீலை அகற்றக்கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்று குடோன் உரிமையாளர் பாக்கியலட்சுமி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இன்னொருபுறம், அண்மையில் பாஜகவிலிருந்து அதிமுகவில் சேர்ந்த அசோக்குமார், தேர்தல் பணிகளில் உள்ளூர் அதிமுகவினரை உதாசீனப்படுத்திவருகிறாராம்.அவருடைய் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களை வைத்தே தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறாராம்.

அதுமட்டுமின்றி, தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தந்தால் ஒரு பெரிய தொகையை அதிமுக தலைமைக்குக் கொடுப்பதாக உறுதி கொடுத்திருந்தாராம்.ஆனால் சொன்னபடி தலைமைக்கும் பணம் தராமல் தேர்தல் செலவிலும் கஞ்சத்தனம் காட்டி வருகிறாராம். அதனால் அத்தொகுதி அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response