ஈரோட்டில் அதிக வெயில் – இதுதான் காரணமோ?

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கத்திரி வெயில் இன்று தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே தகிக்கும் வெயிலைப் பார்த்து மக்கள் கதிகலங்கி நிற்கின்றனர். மேலும் வெயிலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதனால்தான் வானிலை மையமும், தமிழ்நாடு சுகாதாரத்துறையும் இணைந்து, பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் தினமும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணம் குறித்தும், அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கூறியதாவது:…

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கூடுதல் வெப்பம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர், ஆனால், கடந்த ஆண்டில் பதிவான வெப்ப அளவுகளுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 2-3 டிகிரி மட்டுமே வெப்பம் அதிகரித்து இருக்கிறது. பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களில் வெப்பம் 6 டிகிரி வரை கூடுதலாக பதிவாகிறது. 12 மணிக்கு உச்சி வெயில் என்று சொல்வார்கள். ஆனால், அதிகபட்சமாக வெயில் பதிவாவது 2.45 மணிக்குதான்.

காரணம், 12 மணி வெயில் இருந்தாலும், பூமியை கிரகித்துக்கொண்டு வெளியே வெப்பம் விடும் நேரம் 2.45 மணி தான். எனவே, வெயில் தற்போது அதிகரித்துள்ளதால், வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெயிலில் போகக்கூடாது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வெயில் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றனர். அதற்குக் காரணம், மரங்கள் வெட்டப்பட்டு பெரிய கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்பட்டது தான், மரங்கள் அதிகமாக அழிந்து, கட்டிடங்களின் பரப்பு அதிகரிக்கும்போது வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

எனவே, மக்களும் அரசாங்கமும் இணைந்து இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு காரில் 4 பேர் செல்வதற்கு பதிலாக 4 பேர் 4 கார்களை தனித்தனியாகப் பயன்படுத்துகின்றனர். ஒரே காரை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் வாகன நெரிசலும் குறையும், வெப்பமும் குறைய வாய்ப்புள்ளது. பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்தினாலும் வாகன நெரிசல் குறையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவ்வாண்டு தமிழ்நாட்டில் முதலிடம் இந்தியாவில் இரண்டாமிடம் என ஈரோடு வெயிலில் வதங்கிக் கொண்டிருக்கிறது.இது ரமணன் கூற்றை உண்மையாக்கும் வகையில் இருக்கிறது.

எப்படியெனில்?

ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரை நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து சாலைக்கே பந்தல் போட்டது போல் நிழல் கொடுத்துக் கொண்டிருந்த பல்லாயிரம் மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டார்கள்.அதன் விளைவே ஈரோடு கடும் அணலில் வாட்டி வதைக்கப்படுகிறது என்கிறார்கள்.

Leave a Response