ஈரோடு அரசு மருத்துவமனையில் மக்கள் விரோதச்செயல் – களமிறங்கிய நாம் தமிழர் கட்சி

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம், 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதைய துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் அதை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.

இப்போது அந்த இயந்திரத்தை முற்றிலுமாக அகற்றி பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல பணிகள் நடந்து வருகிறது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட நாம்தமிழர் கட்சியினர் உடனடியாகக் களமிறங்கி இந்த இயந்திரத்தை இங்கிருந்து அகற்றக்கூடாது என்ற கோரிக்கையுடன் மருத்துவமனை நிர்வாகியைச் சந்தித்தனர்.

இயந்திரத்தை இடம் மாற்றினால், ஈரோடு மாநகர மக்கள் மட்டுமின்றி பிற மாவட்டத்திலிருந்து சிகிச்சைக்கு வரும் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள் எனவே இந்த இயந்திரத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று சொன்னதோடு தற்போது இடமாற்றம் செய்ய என்ன காரணம் எனக்கேள்வி எழுப்பினர் நாம்தமிழர் கட்சியினர்.

அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர், இந்தப் பழைய இயந்திரம் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காகப் பயன்படுத்த எடுத்துச்செல்லப்படுகிறது. தலைமை மருத்துவமனைக்கு புதிய இயந்திரம் வாங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு அரசு தரப்பில் நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் இப்படிக் கூறினாலும்,மருத்துவமனையில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டபோது ஈரோடு நகரத்தில் தனியார் எம் ஆர் ஐ ஸ்கேன் மையங்கள் பெரியளவில் இல்லை. ஆனால் தற்போது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையைச் சுற்றியே சுமார் ஆறுக்கும் மேற்பட்ட தனியார் ஸ்கேன் சென்டர்கள் வந்து விட்டன. அங்கு, எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க தனியாரில் சுமார் ஏழு ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை கட்டணம் வசூல் செய்கிறார்கள்.

அரசு மருத்துவமனையில் இரண்டாயிரத்து ஐநூறு(2500)தான் கட்டணமாகப் பெற்று வந்தனர்.இதனால் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுப்பவர்கள் கூட எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டுமென்றால் அரசு மருத்துவமனைக்கு வந்து ஸ்கேன் எடுத்தனராம். இதனால் தனியார் ஸ்கேன் மையங்களின் இரகசிய நெருக்கடி காரணமாகவே அரசு மருத்துவமனை இயந்திரம் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதி துணைத்தலைவர் அ.தமிழ்ச்செல்வன்,தனியார் ஸ்கேன் மையங்களுக்கு இலாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக அரசு மருத்துவமனை நிர்வாகம் இப்படி ஒரு செயலைச் செய்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினரோ, புது இயந்திரம் வைப்பதற்காகவே பழைய இயந்திரம் மாற்றப்படுகிறது என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையென்றால் உடனடியாக அதைச் செய்யவேண்டும். இன்னும் சில நாட்கள் கழித்து அதனை நாங்கள் ஆய்வு செய்வோம்.எல்லாம் சரியாக நடந்தால் நல்லது இல்லையேல் மக்களிடம் இச்செய்தியைக் கொண்டு சென்று அவர்களோடு இணைந்து பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.

– கதிரெழிலன்

Leave a Response