நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அந்தக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் முன்நிறுத்தப்பட்டார்.
எதிர்க்கட்சியான சனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் அந்தக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். கடந்த 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.நான்காம் தேதி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.
அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்குப் பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர்குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
கடந்த 3 நாட்களாக தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடித்து வந்தது. பெரும்பான்மையான மாகாணங்களில் முடிவுகள் தெரிந்த நிலையில் ஜோ பைடனுக்கு 264 வாக்குகளும், அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு 214 வாக்குகளும் கிடைத்திருந்தன.
ஜார்ஜியா, பென்சில்வேனியா, நவேடா, அரிசோனா, நார்த் கரோலினா ஆகிய 5 மாகாணங்களின் முடிவுகளில் இழுபறி நீடித்தது. அந்த மாகாணங்களில் வாக்குகள் மிகவும் பொறுமையாக எண்ணப்பட்டன. ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்தப் பின்னணியில் பென்சில்வேனியா, நவேடா மாகாணங்களை நேற்றிரவு ஜோ பைடன் கைப்பற்றினார். பென்சில்வேனியாவின் 20 வாக்குகள், நவேடாவின் 6 வாக்குகளும் பைடனுக்குக் கிடைத்தது. இதன்மூலம் அவர் 290 வாக்குகளைப் பெற்றார். பெரும்பான்மையை எட்டிய அவர் அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகப் பதவியேற்க உள்ளார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்கிறார்.
வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வாக்காளர் குழு தனது வாக்கினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும். அதன் அடிப்படையில் ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். ஜனவரி 20 ஆம் தேதி புதிய அதிபர், துணை அதிபர் பதவியேற்பார்கள்.
தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளார்.