இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி-20
மட்டைப்பந்து போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியிலுள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களும், கே.எல்.ராகுல் 52 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிடான் தாஸ் மற்றும் முகமது நய்ம் களமிறங்கினர். லிடான் தாஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சௌமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மிதுன் 27 ரன்கள் குவித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
மறுபுறம் அதிரடியாக ஆடிய முகமது நய்ம் மட்டும் 81 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இறுதியில் வங்கதேசம் அணி 19.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றிக்குக் காரணமான பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என்கிற விகிதத்தில் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி.