முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்று உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.
அவருக்கு வயது 87.

தமிழகத்தைச் சேர்ந்த டி.என். சேஷன் ஐஏஎஸ் முடித்து மத்திய அரசில் பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10 ஆவது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதிவரை பொறுப்பு வகித்தார்.

ஆணையராக இருந்த காலகட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கமிஷனில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

இதற்காக அவரை பல அரசியல் கட்சிகள் விமர்சித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் தேர்தல் சீர்திருத்தப்பணியில் தீவிரமாக இருந்தார். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் பலம் என்ன? என்பது சாதாரண பொதுமக்களுக்கும் தெரியவந்தது. அந்த அளவுக்கு தேர்தல் ஆணைய நடவடிக்கையை வெளிப்படையாக்கினார்.

இவரது தந்தையின் பெயர் டி.எஸ். நாராயணய்யர். தாயார் சீதாலட்சுமி.

சென்னை தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பி.எஸ்.சி.(ஹானர்ஸ்) அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (பொது நிர்வாகம்), ஐ.பி.எஸ் (1953),ஐ.ஏ.எஸ்.(1954) முடித்தார். தமிழகத்தில் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை கலெக்டர் , போக்குவரத்து துறைஇயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். இவருக்கு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.

Leave a Response