இந்தியா திவாலாகி விட்டதா? – நிதிநிலையை அறிக்கையை வைத்து பெ.மணியரசன் கேள்வி

இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிச்சமிருக்கும் மாநில உரிமைகளையும் பறித்துவிடும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று (05.07.2019) மக்களவையில் தாக்கல் செய்துள்ள 2019 – 2020 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, “மாநில அரசுகளே இனி தேவையில்லை; எல்லாவற்றையும் நடுவண் அரசே பார்த்துக் கொள்ளும்” என்ற கருத்தைத்தான் மறைமுகமாக வலியுறுத்துகிறது.

வீடுகளுக்குக் குடிநீர் வழங்குவது, வீடு கட்டித் தருவது உட்பட அனைத்துத் திட்டங்களையும் இந்திய அரசே நேரடியாகச் செய்யும் என்ற திட்டத்தை அவர் அறிவித்துள்ளார். அனைத்திந்திய அளவில் தண்ணீர் அதிகார மையம் அமைக்கப்படும் என்றும் சொல்கிறார். அதைப்போல், அனைத்திந்திய அளவில் மின்சார அதிகார மையம் அமைக்கப்படும் என்றும் சொல்கிறார்.

ஏற்கெனவே, இந்தியா முழுமைக்கும் ஒரே குடும்ப அட்டை (ரேசன் கார்டு) திட்டத்தை அறிவித்துள்ளார்கள். மாவட்ட அளவிலான நீதிபதிகள் நியமனம், தொடக்கப் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றை அனைத்திந்திய அளவில் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இனி மாநில ஆட்சி என்பது, இந்திய அரசின் ஏவல்களைச் செய்யும் முகவாண்மையாக நடைமுறையில் மாறிவிடும்!

கவர்ச்சியான சொற்களால் கட்டமைக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை காகிதப் பூ மாலை போல்தான் உள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம், ஒரு இலட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாக நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார்.

குடும்பத்திற்கு வருமானமில்லாமல் திவாலாகிப் போன நிலையில்தான், நகைகள் உள்ளிட்ட வீட்டின் சொத்துக்களை விற்று குடும்பச் செலவுகள் பார்ப்பார்கள். அதைப்போல் தான் மக்களின் சொத்தாகிய பொதுத்துறை நிறுவனப் பங்குகளை அயலாருக்கு விற்று இந்திய அரசு நிர்வாகம் நடத்துகிறது.

அதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களையும் விற்று பணம் ஈட்டப் போகும் செய்தியை நேற்று (04.07.2019) தாக்கல் செய்த நிதிநிலை ஆய்வறிக்கையில், இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார மதியுரைஞர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தி உள்ளார்கள். ஏற்கெனவே பெட்ரோல் டீசல் விலை அன்றாடம் உயர்ந்து வருவதால், பெருமளவு விலையேற்றங்கள் ஏற்படுகின்றன. மக்கள் பெரும் பொருளாதார சுமைகளைத் தாங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தங்களின் வருவாயில் கணிசமானத் தொகையை பெட்ரோல், டீசல் அபகரித்துக் கொள்வதால் மக்கள் அல்லாடுகிறார்கள்.

கிராமங்களிலிருந்து அதிக மக்கள் நகரங்களுக்குக் குடிபெயர்வதால், நகர வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன என்று கூறி, நகரங்களுக்கு அதிக மக்கள் வராத வகையில் கிராமங்களிலேயே அதிக வசதிகள் செய்து தருவோம் என்று நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார்.

சென்னை, கோவை, திருப்பூர், சேலம், மதுரை போன்ற பல நகரங்களில் இந்திக்காரர்கள் அதிகமாகக் குடியேறுவதால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் இந்திக்காரர்களும் வெளி மாநிலத்தவரும் மிகை எண்ணிக்கையில் குடியேறி தமிழ்நாட்டில் மண்ணின் மக்களின் தாயக உரிமையையும் வாழ்வுரிமையையும் பறித்துக் கொள்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு இந்திய ஆட்சியாளர்கள் நிதிநிலை அறிக்கையில் தீர்வு சொல்வில்லை!

தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை தீர்ப்பதில் இந்திய ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லையா அல்லது இந்த நெருக்கடி நீடிக்கட்டும் – வளரட்டும் என்று இனப்பாகுபாட்டு நோக்கத்தோடு அவர்கள் கருதுகிறார்களா?

ஒட்டுமொத்த இந்தியாவிலும் உழவர்கள் துயரம் பெரிது; தாங்க முடியாத கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் உற்பத்தி செய்யும் நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கும் மற்ற வேளாண் விளை பொருட்களுக்கும் இலாபவிலை கிடைக்காமல் இந்திய அரசு முடக்கி வைத்திருப்பதுதான்!

இந்திய அளவில் நெல் – கோதுமை உற்பத்தி உபரியாக இருக்கிறது. எனவே, வெளிநாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்து இலாப விலையில் விற்க இந்திய அரசு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அதுபற்றி எந்தப் பேச்சும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை! “உழவர்களை வாழ வைப்போம்” என்று கூறும் நிர்மலா சீத்தாராமனின் ஒய்யாரப் பேச்சு, அவர்களை எப்படி வாழ வைக்கும்?

வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை என்று கூறுவதே உழவர்களின் வயிற்றில் அடிக்கும் கொள்கையாகும்! சந்தையில் மற்றப் பொருட்களின் விலை மதிப்புக்கு ஏற்ற அளவில் (Parity in price), வேளாண் விளை பொருட்களின் விலையும் உயர வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு நல்ல இலாப விலை கிடைக்க ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இப்பொழுது நெல்லின் விலை ஒரு கிலோவுக்கு 65 காசு உயர்த்தி இருக்கிறார்கள். இது எந்த வகையில் உழவர்களின் உழைப்புக்கு நீதி வழங்கும்?

நிதிநிலை அறிக்கை எந்த வகையிலும் நாட்டு மக்களின் துயரம் தீர்ப்பதாகவோ, பொருளாதார வளர்ச்சிக்குரியதாகவோ இல்லை என்பதுடன், மிச்சம் மீதி இருக்கும் மாநில உரிமைகளை பறிப்பதாகவும் இருக்கிறது!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response