நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய புறநானூற்று பாடல் மற்றும் விளக்கம்

2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வாசித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்துவிட்டார் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய பாடலும் விளக்கமும்….

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

பாடியவர்: பிசிராந்தையார்
–புறநானூறு_184

இதன் விளக்கம்:

மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை பல நாட்களாக உண்ணும்.

ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.

ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல், அநியாயமாக வரியை திரட்ட விரும்பினால் யானை புகுந்த நிலம் போல தானும் கெட்டு தன் நாட்டையும் கெடுப்பான்.

இந்த விளக்கத்தைப் பார்க்கும்போது நிர்மலா சீதாராமன் மோடியைப் பாராட்டுகிறாரா? திட்டுகிறாரா? என்று தெரியவில்லை.

ஏனெனில் மோடி அநியாயமாக வரியைத் திரட்டுகிறார் என்பது பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் இந்தப்பாடலை மேற்கோள் காட்டியிருப்பது சந்தேகத்தை உண்டாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

Leave a Response