சென்னை விமான நிலையம் தனியார்மயம் – இராகுல்காந்தி கடும் கண்டனம்

ஒன்றிய அரசுக்குச் சொந்தமான ரூ.6 இலட்சம் கோடி சொத்துகளை ஏலம் விடும் தேசிய பணமாக்கும் திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதன் மூலம், சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உட்பட முக்கிய விமான நிலையங்கள், தொடர்வண்டித்துறை, நெடுஞ்சாலை, மின் திட்டம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட உள்ளன.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் பெரும்பாலான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு பணமாக்கும் புதிய திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை ஏலம் விட்டு நிதி திரட்டும் திட்டமே தேசிய பணமாக்கல் திட்டம்.

ஒன்றிய அரசின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது என்று காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மோடி அரசுக்குச் சாதகமான தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துகளைப் பரிசாக பிரதமர் அளிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

நாட்டின் சொத்துகள் அனைத்தையும் பாஜக அரசு விற்றுவிட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த சொத்துகளை வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு பிரதமர் பரிசாக அளிக்கிறார். நாட்டின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களை தனியாருக்கு பிரதமர் மோடி விற்கிறார். தேசிய சொத்துகளைப் பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டத்தால் ஏகபோக வர்த்தகம் அதிகரிக்கும். காங்கிரசு ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யவில்லை என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறார். காங்கிரசு உருவாக்கிய தேசிய சொத்துகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. மத்திய அரசின் திட்டத்தால் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும். இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு என்பதையே மத்திய அரசு ஒழிக்கப் பார்க்கிறது.

இரண்டு, மூன்று பெரு நிறுவனங்கள் மட்டும் வளர்ச்சி அடைந்தால் சிறு, குறு தொழில்துறையே அழிந்துவிடும். சிறு, குறு தொழில்துறை அழிவதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே கேள்விக்குறியாகும். குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் அரசின் சொத்துகளைத் தாரைவார்க்கிறது மோடி அரசு.

நீண்டகாலமாக நட்டத்தில் இருக்கும் தொழில்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். குறைந்த சந்தைப் பங்கைக் கொண்ட நிறுவனங்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். ஒரு குறிப்பிட்ட துறையில் தனியார் துறை ஏகபோகத்தை சரிபார்க்கும் திறனுடன் நாங்கள் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவில்லை.

நாங்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் எங்கள் தனியார்மயமாக்கல் திட்டத்தில் ஒரு தர்க்கம் இருந்தது. நாங்கள் மூலோபாயத் தொழில்களைத் தனியார்மயமாக்கவில்லை. தொடர்வண்டித்துறையை மூலோபாயத் தொழிலாக நாங்கள் கருதுகிறோம், ஏனெனில் அது கோடிக்கணக்கான மக்களைக் கொண்டு செல்கிறது மற்றும் நிறையப் பேரை வேலைக்கு அமர்த்துகிறது”

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Leave a Response