27 ஆண்டுகளுக்குப் பின் மோசமான தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான்

10 அணிகள் பங்கேற்றுள்ள 12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்து திருவிழா இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டியின் 2 ஆவது நாளான நேற்று நாட்டிங்காமில் நடந்த 2 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகள்-பாகிஸ்தான் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணித்தலைவர் ஜாசன் ஹோல்டர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் மட்டை பிடித்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரை ஷெல்டன் காட்ரெல் வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் புயல் வேக பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணியினர் தொடக்கம் முதலே தடுமாறினார்கள். அதிலும் குறிப்பாக ஷாட் பிட்ச் பந்து வீச்சு நன்கு எகிறியதால் அதனை அடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் விக்கெட்டை இழந்தனர்.

3 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்தது. இமாம் உல்-ஹக் (2 ரன்) ஷெல்டன் காட்ரெல் பந்து வீசில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த பஹார் ஜமான் (22 ரன்) வித்தியாசமான முறையில் ஆட்டம் இழந்தார். ஆந்த்ரே ரஸ்செல் வீசிய பவுன்சர் பந்து பஹார் ஜமானின் ஹெல்மெட்டை தாக்கியதுடன், ஸ்டம்பையும் பதம் பார்த்தது.

பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து மள, மளவென்று சரிந்தன. 21.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 105 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பஹார் ஜமான் 22 ரன்னும், பாபர் அசாம் 22 ரன்னும், வஹாப் ரியாஸ் 18 ரன்னும், முகமது ஹபீஸ் 16 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஒஷானே தாமஸ் 4 விக்கெட்டும், ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், ஆந்த்ரே ரஸ்செல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் 2 ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 74 ரன்னில் சுருண்டு இருந்தது.

பின்னர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நிகோலஸ் பூரன் சிக்சர் விளாசி அணி வெற்றி இலக்கை எட்டவைத்தார். கிறிஸ் கெய்ல் 50 ரன்னும் (34 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன்), ஷாய் ஹோப் 11 ரன்னும், டேரன் பிராவோ ரன் எதுவும் எடுக்காமலும் முகமது அமிர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள். நிகோலஸ் பூரன் 34 ரன்னுடனும் (19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஹெட்மயர் 7 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave a Response