தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகம் காரணமாக ஆர்கே நகரில் போட்டியிடவில்லை–மு.க.ஸ்டாலின் விளக்கம்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருவள்ளூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது,

டான்சி ஊழல் வழக்கில் சிக்கி விடுதலை ஆன ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கை 19 ஆண்டுகள் இழுத்தடித்தார். நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்புக்கும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்புக்கும் உள்ள வேறுபாட்டால் நீதித்துறையே தலைகுனிந்து உள்ளது என்று நீதிபதிகளும், எதிர்கட்சியினரும் கூறி வருகின்றனர்.

குன்கா தீர்ப்பு கூறியதால் பதவி இழந்த ஜெயலலிதாவின் தொகுதியில் தேர்தல் ஆணையம் எப்போது தேர்தலை அறிவித்தது. ஆனால், குமாரசாமியின் தீர்ப்புக்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது பதவியை ராஜினாமா செய்து சட்டமன்ற செயலாளரிடம் கடிதம் வழங்கினார். அன்று மாலையே தேர்தல் ஆணையம் அந்த தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கின்றது.

இதனால்தான் தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் தி.மு.க.வுக்கு வருகிறது. இடைத்தேர்தலை கண்டு தி.மு.க. அஞ்சவில்லை. சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரி தி.மு.க. தேர்தல் ஆணையத்தின் மீது எழுந்த சந்தேகத்தால் தான் தி.மு.க. தேர்தல் களத்தில் நிற்கவில்லை.

குமாரசாமியின் தீர்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு தி.மு.க. செல்லும். ஆனால், அதற்கு முன்பாக மக்கள் நீதிமன்றமாகிய உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் 2016-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் உரிய தீர்ப்பை வழங்க வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சியில் திருவள்ளூர் நகருக்கு 15 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கினோம். ஆனால், அந்த பணி நடைபெற்றதா? பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.12 கோடி முதல் தவணையாக வழங்கி பணியை தொடங்கினோம். ஆனால், அந்த பணியை இன்னும் அ.தி.மு.க. அரசு செய்யவில்லை.

தி.மு.க. ஆட்சியில் டி.வி கொள்முதல் செய்ய குழு அமைத்தோம். ஆனால் அ.தி.மு.க. அரசு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்க குழு அமைக்கவில்லை. இதனால் ஊழல் நடக்கும். எனவே தமிழகத்தில் அ.தி.மு.க.வின் கமிஷன் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறலாம். அமைச்சர்கள் கமிஷன் வாங்குவது போய் அதிகாரிகள் கமிஷன் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மாற்று திறனாளிகள் என்று போராடும் நிலைதான் உள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Response