ஒரு தொகுதியில் தோற்றுப் போனது இந்தியா – கபிலன் கவிதை

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி 14,2019 அன்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.

சமுதாய அக்கறை மிக்க கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான கபிலன் இந்நிகழ்வு குறித்து இயற்றியுள்ள கவிதை நக்கீரன் ஏட்டில் பதிவாகியுள்ளது.

அந்தக் கவிதை…..

வெட்டப்பட்ட
சீருடைச்செடிகளின்
வேர்கள்
நரம்புகளாய்
சிதறிக்கிடக்கிறது

மரணம்
மருத்துவனின் ஏமாற்றம்
இந்த
மாவீரன் மரணம்
மனிதனின் ஏமாற்றம்

புல் நடுவார்கள் என்
நம்பினோம்
தீக்குச்சியை நட்டுப்
போனார்கள்

இரும்புக்கூட்டில்
எப்படி வந்தது
கிளியின் வடிவில்
வெடிகுண்டு

ஏற்றிய
தேசியக்கொடியிலிருந்து
பூக்கள்
உதிரவில்லை
நாற்பது வீரர்களின்
ரத்தம் உதிர்கிறது

தங்கள் பிணத்தை
தாங்களே தூக்கினர்
குண்டு வெடித்தவர்க்கே
குண்டுகள் முழங்கின

அவர்களுக்கு
அடுத்தவேளை உணவு
அணுகுண்டா?

முழுகுவர்த்தியை
எரிக்கும்
தீப்பந்தமாய்
பனிக்கட்டியில் வெடித்தது
பயங்கரவாதம்

பிணம் தின்னும்
கழுகு
உன் தேசியப்பறவையா?

ஒரு தாய்
பிள்ளையைக்
காப்பதுபோல்
எல்லையைக் காத்தோம்
சிசுக்கொலையாய்
முடிந்தது
சிப்பாய்க் கலவரம்

இந்தியாவில் சிலர்
நாற்பது தொகுதியிலும்
ஜெயிப்பேன்
என்பார்களே!
ஒரு தொகுதியில்
நாற்பது பேரால்
தோற்றுப் போனது
இந்தியா

Leave a Response