ஆசியக்கோப்பை – மிரட்டிய வங்கதேசம் போராடி வென்ற இந்தியா

14 ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2 வார காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது.

துபாயில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின.

‘டாஸ்’ வென்ற இந்தியஅணித் தலைவர் ரோகித் சர்மா முதலில் வங்கதேச அணியை பேட் செய்யப் பணித்தார்.

இதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டான் தாசும், மெஹிதி ஹசனும் களம் புகுந்தனர். இந்திய வேகப்பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்ட லிட்டான் தாஸ், பும்ரா, புவனேஷ்வர்குமாரின் ஓவர்களில் சில பவுண்டரிகளை ஓட விட்டார்.

வேகப்பந்து வீச்சை இவர்கள் திறம்பட சமாளித்ததால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 6–வது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சை கொண்டு வந்தார். அதற்கும் பலன் இல்லை. யுஸ்வேந்திர சாஹலின் ஒரே ஓவரில் லிட்டான் தாஸ் 2 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அவர் 52 ரன்களில் இருந்த போது கொடுத்த சுலபமான கேட்ச் வாய்ப்பை யுஸ்வேந்திர சாஹல் வீணடித்தார். இந்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லிட்டான் தாஸ் தொடர்ந்து ரன்மழை பொழிந்தார். 17.5 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடியின் ஆதிக்கத்துக்கு ஒரு வழியாக பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் முடிவு கட்டினார். அவரது முதல் ஓவரில் மெஹிதி ஹசன் (32 ரன், 59 பந்து, 3 பவுண்டரி) ஸ்டம்பை விட்டு விலகி பந்தை விரட்டிய போது ‘கவர்பாயிண்ட்’ திசையில் நின்ற அம்பத்தி ராயுடுவின் கையில் கேட்ச்சாக விழுந்தது. லிட்டான் தாஸ்– மெஹிதி ஹசன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் (20.5 ஓவர்) திரட்டியது. இந்தியாவுக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு வங்காளதேச ஜோடி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது.

இதைத் தொடர்ந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது தாக்குதல் தொடுத்து நெருக்கடி அளித்தனர். அடுத்து வந்த இம்ருல் கேயஸ் (2 ரன்), அபாயகரமான பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம் (5 ரன்), முகமத் மிதுன் (2 ரன்), மக்முதுல்லா (4 ரன்) ஆகியோர் வரிசையாக நடையை கட்ட, அவர்களின் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. இதற்கிடையே 23 வயதான லிட்டான் தாஸ் தனது முதலாவது சர்வதேச சதத்தை நிறைவு செய்தார்.

300 ரன்களை நெருங்குவது போல் சென்ற அவர்களின் ரன்வேகம் 31 ரன் இடைவெளியில் அடுத்தடுத்து 5 விக்கெட் வீழ்ந்ததால் தடாலடியாக தடம்புரண்டது. அணியின் ஸ்கோர் 188 ரன்களை எட்டிய போது, லிட்டான் தாஸ் (121 ரன், 117 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) குல்தீப் யாதவின் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதன் பிறகு சவும்யா சர்கார் (33 ரன்) தவிர வேறு யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

முடிவில் வங்காளதேச அணி 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதில் 3 வீரர்கள் ரன்–அவுட் ஆனதும் அடங்கும். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுகளும், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணியின் சார்பில் அணித்தலைவர் ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் தவான் 15(14) ரன்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் 2(7) ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கு, ரோகித் சர்மாவும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். அதில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 48(55) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக்குடன், தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் மெதுவாக உயர்ந்தது. அப்போது தினேஷ் கார்த்திக் 37(61) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து தோனியும் 36(67) ரன்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் காயம் காரணமாக 19(20) ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜடேஜாவும், புவனேஷ்வர் குமாரும் அணியை வெற்றிபெற செய்ய போராடினர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் ஜடேஜா 23(33) ரன்களில் கேட்ச் ஆக, அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் 21(31) ரன்களில் வெளியேற இந்திய அணிக்கு அழுத்தம் கூடியது.

முடிவில் கேதர் ஜாதவ் 23(26) ரன்களும், குல்தீப் யாதவ் 5(5) ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக, ரூபெல் ஹொசைன், மிஷிபூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நம்சுல் இஸ்லாம், மோர்டசா, முகமதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

Leave a Response