கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. பெண்கள் விஷயத்தில் பாகுபாடு காட்டக்கூடாது என நீதிபதிகள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதில் நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். தீபக் மிஸ்ராவுடன் கன்வில்கர் இணைந்து அளித்த தீ்ர்ப்பை, நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் இந்த அமர்வில் இருக்கும் ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். எனினும் ஐந்து நீதிபதிகளில் 4 பேர் ஒரே கருத்தை கொண்டு இருப்பதால் அந்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். அவரது தீர்ப்பில் கூறியதாவது….
மதரீதியான பழக்கங்களுடன் பெண்களுக்கான சம உரிமையை தொடர்புபடுத்த முடியாது. மதரீதியான பழக்கங்களை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. வழிபாடு நடத்துவோர் தான் முடிவு செய்ய வேண்டும்.
மதநம்பிக்கையுடன் பகுத்தறிவு, மாறும் சூழல் போன்றவற்றை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு சமூகமும் பின்பற்றி வரும் மத நம்பிக்கையை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது.
இந்தியா பல்வேறு மக்கள் வாழும் நாடு. அவர்களது நம்பிக்கையைப் பின்பற்ற அரசியல் சட்டம் அவர்களுக்கு உரிமை வழங்கியுள்ளது. ஒருவரது நம்பிக்கையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு சமூகத்தில் பெரும் தீங்கு நிலவினால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.
தற்போதைய தீர்ப்பு என்பது சபரிமலையுடன் நிறுத்திக் கொள்ள முடியாது. இது மேலும் விரிவடையும். மிக ஆழ்ந்த மத நம்பிக்கையை இதுபோன்று சர்வசாதாரணமாக புறந்தள்ள முடியாது. மத நம்பிக்கை பெண்ணுரிமையுடன் ஒப்பிட முடியாது. இது முழுக்க முழுக்க வழிபாட்டு உரிமை. அதனை அவர்களே முடிவு செய்ய இயலும். நீதிமன்றம் இதில் தலையிட எந்த வாய்ப்பும் இல்லை.
கணவரின் சிதையுடன் பெண்களை உயிருடன் எரியூட்டும் கொடூரமான சதி போன்ற பழக்கத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால் சபரிமலை கோயில் நம்பிக்கை என்பது வேறானது. தான் நம்பும் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை அனைவருக்கும் உள்ளது எனக் கூறினார்.