ஐயப்பன் கோயில் – பெண்களுக்குப் பெண்ணே எதிரி

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதியில்லை.

பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலினச்சமத்துவத்துக்கு எதிரானது எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கில் தங்கள் பதிலைத் தெரிவித்த கேரள இடதுசாரி அரசு, பருவம் எய்திய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறோம் என்று கடந்த ஜூலை 18 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தது. முன்பு கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதிமுதல் 8-நாட்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இன்று (செப்டம்பர் 28,2018( அந்தத் தீர்ப்பு வெளியானது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில்,

சபரிமலை கோயிலில் நீண்ட காலமாகவே பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும். கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்டவிரோதம்.கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சுதந்திரம், மரியாதை, பாலின சமநிலைக்கு எதிரானது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறினார்.

தீபக் மிஸ்ராவுடன் கன்வில்கர் இணைந்து அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அறிவித்தனர்.

ஆனால் இந்த அமர்வில் இருக்கும் ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். எனினும் ஐந்து நீதிபதிகளில் 4 பேரும் ஒரே கருத்தை கொண்டு இருப்பதால் அந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Leave a Response