அடுத்தவர் மனைவியை அபகரிப்பது தப்பில்லையா? உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது? – ஓர் அலசல்

இந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குற்றம் என சொல்கிறது. இந்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல. இந்த சட்டத்தின்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலுறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.

இருவருர் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497 ஆவது பிரிவு ரத்து செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திருமணம் என்ற பந்தத்தை வலுப்படுத்தவும், அதன் புனிதத்தை காக்கவுமே 150 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டதாக வாதாடினர். ஆனால் அவர்கள் வாதத்தை நீதிபதிகள் தற்போது நிராகரித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.

அதேநேரம், இனிமே எவன் பொண்டாட்டியையும் எவனும் கரெக்ட் பண்ணிக்கலாம், நீதிபதியே சொல்லிட்டாருன்னு மீம்ஸ்கள் அதிகம் வருகின்றன.

அதற்கான எதிர்வினையாக கார்ல்மார்க்ஸ்கணபதி எழுதியிருக்கும் பதிவில்….

“ஒரு திருமணமான பெண்ணுடன் (அவளுடைய கணவனது சம்மதம் இல்லாமல்) வேறொரு ஆண் உடலுறவு வைத்துக்கொண்டால், அதை குற்றமாகக் கருதி அவனுக்கு தண்டனையளிக்கவேண்டும்” என்பதுதான் சட்டப்பிரிவு 497 ன் சாராம்சம். இத்தகைய பிறழ் உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு இதில் தண்டனை கிடையாது என்பது முக்கியம்.

இப்போது இந்த சட்டப்பிரிவு 497ஐ தான் உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்து நீக்கியிருக்கிறது. இந்த விக்டோரியா காலத்து சட்ட நடைமுறை ஏன் வந்தது என்றால், ஒரு பிறழ் உறவில் பெண்ணை seduce செய்வபவனாக ஆணை அது வரையறுக்கிறது. அதனால் அவன் குற்றவாளி. நடந்த பிறழ் உறவில் ஆணின் தூண்டுதலுக்கு ஆளாகி பாதிப்புக்கு உள்ளானவள் மட்டுமே பெண் (victim), அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது என்பதே இதுவரை இருந்து வந்த சட்டம்.

“கணவன் ஒன்றும் மனைவிக்கு முதலாளி அல்ல” என்றும் இது ”ஒரு பெண் என்ற அடிப்படையில் அவளது கவுரவத்தைக் குலைப்பதாக இருக்கிறது” என்கிறார் தலைமை நீதிபதி. அவர் சொல்வது உண்மைதான். பெண்ணை சொத்தாகப் பார்க்கும் பழைய நடைமுறையே இந்த சட்டத்தின் அடிப்படை. இந்த சட்டம் நீண்ட காலத்திற்கு முன்பே நீக்கப்பட்டிருக்கவேண்டியது. இப்போது நீக்கப்பட்டிருப்பதை வரவேற்கவேண்டும்.

மேலும் இந்த சட்ட நீக்கம் அவளது உரிமையை அங்கீகரிக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் அவளது செய்கைக்கு அவளுக்கு இருக்கும் பங்கையும் உறுதி செய்கிறது. இந்த சட்டப் பிரிவு நீக்கத்தை ஏதோ கள்ள உறவில் ஈடுபடத் தூண்டும் உத்வேகம் போல புரிந்துகொள்ளவேண்டியதில்லை. மேலும் கல் தோன்றி மண்தோன்றிய காலத்திலேயே கள்ள உறவும் தோன்றியது என்பதுதான் மனிதகுல வரலாறு.

நவீன காலத்தில் என்றல்ல, பழங்காலத்திலும் கூட seduce செய்வது என்று வந்தால் ஆணை விட பெண்கள்தான் தீவிரமாக இருந்திருக்கிறார்கள் என்பதே இதிகாசங்களின் வழி நாம் புரிந்துகொள்வது. பிறகு எதற்கு இந்த மாதிரி ஒரு சட்டம் வந்திருக்கும் என்றால், நெருங்குபவனை பயமுறுத்தி துரத்தி விடுவதற்குத்தான் என்றே நினைக்கிறேன். அவளைக் கண்காணிப்பதை விட இது சுலபம் என்றும் நினைத்திருக்கலாம். அதன் மூலம் மனைவி மீது ஒரு கட்டுப்பாட்டை கணவன் சாதித்துக்கொள்ள முடியும் என்பதுதான் நோக்கம். நமது மத கோட்பாடுகளுக்கும் இதுவே அடிப்படை. மதத்திலிருந்துதானே சட்டங்கள் வருகின்றன.

இன்றைய சமூக நிலையோடு வைத்து பொருத்திப் பார்த்தால், இதைப் போன்ற சட்டப்பிரிவு மாற்றங்கள், நீக்கங்கள் நிறைய செயல்படுத்த வேண்டியிருக்கிறது என்பதே உண்மை.

நாம் தினமும் நாளிதழ்களில் படிக்கும் கள்ளக்காதல் கொலைகளுக்கு, குறிப்பாக கணவன்கள் கொல்லப்படுவதில், “மாட்டிக்கொண்டால் ஆணுக்கு தண்டனை” எனும் அச்சத்திற்குப் பங்கிருக்கிறதா என்பது ஆராய்ச்சிக்கு உரியது. “நமது கள்ள உறவு எனது கணவனுக்குத் தெரிந்துவிட்டது, அவன் நீதிமன்றத்தை நாடினால் உனக்கு தண்டனை நிச்சயம்…” என்று தான் உறவில் இருக்கும் இன்னொருவனிடம் அந்தப் பெண் சொல்லும் சூழலை கற்பனை செய்து பாருங்கள்.

Manipulate செய்வதில் குறிப்பிட்ட உயரத்தை அடைந்திருக்கும் இன்றைய பெண் சமூகத்தின் ஒரு பகுதி, தனது கணவனுக்கு எதிராக, தனது காதலனை ஏவி விடும் மூர்க்கத்தில் இந்த தீர்ப்பு உடைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவே நான் பார்க்கிறேன். பெண்களின் கவுரவத்தைக் காப்பாற்றும் அதே நேரத்தில், தொடர்புடைய ஆண்களின் உயிரைக் காப்பாற்றுவதிலும் இந்த சட்ட நீக்கம் பெரும் பங்காற்றும் என்பதே கள எதார்த்தம்.

இதே போல பிறழ் உறவு உள்ளிட்ட மற்றைய குற்றங்களிலும், அதில் பங்கு பெரும் பெண், தான் பெண் என்பதாலேயே தன்னை பாதிக்கப்பட்டவளாக முன்வைக்கும் தன்மையைத் தடுக்கும் விதத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியதும் அவசியம். அந்த வகையில் இந்த சட்டப்பிரிவு நீக்கம் பெரும் பாய்ச்சல்!

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response