பிரபல மட்டைப்பந்தாட்ட வீரர் திடீர் திருமணம் – தமிழ்நாட்டுப் பெண்ணை மணந்தார்

இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழும் 27 வயதான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஐந்துநாள் இருந்து விலகினார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெறவில்லை. தனிப்பட்ட காரணத்துக்காக தன்னை அணியில் இருந்து விடுவிக்கும்படி கூறியதன் அடிப்படையில் அவர் சேர்க்கப்படவில்லை.

இதற்கிடையில் அவர் திருமணம் செய்து கொள்வதற்காகவே 20 ஓவர் தொடரில் இருந்து ஒதுங்கினார் தகவல்கள் கசிந்தன. முதலில் அவர் மலையாள நடிகையான அனுபமாவை திருமணம் செய்யப்போவதாக வதந்திகள் பரவின. அந்த வதந்தியைத் தொடர்ந்து முன்னாள் மாடல் அழகியும், பிரபல விளையாட்டு டி.வி.சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை பும்ரா திருமணம் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா முன்னாள் மாடல் அழகியும், பிரபல விளையாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சஞ்சனா கணேசனை இன்று திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்கள் சிலவற்றை பும்ராவும் சஞ்சனாவும் வெளியிட்டுள்ளனர்.

பும்ரா திருமணம் செய்துகொண்டுள்ள சஞ்சனா கணேசன் ஒரு தமிழ்நாட்டுப் பெண். சஞ்சனா கணேசனின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால், தற்போது சஞ்சனா குடும்பத்துடன் மகாராஷ்டிராவின் புனேவில் வசித்து வருகிறார்.

திருமணம் செய்துகொண்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா – சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response