பேரறிவாளன் இல்லத் திருமணம்
குயில்தாசன் – அற்புதம் அம்மாள் ஆகியோரின் பெயர்த்தியும், வே.இராசா – அ.ஞா. அன்புமணி ஆகியோர் புதல்வியுமாகிய அ.இரா. செவ்வை – திருப்பத்தூர் மோட்டூர் பகுதியைச் சார்ந்த சி.கெளதமன் ஆகியோர் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா, தமிழர் தன்மதிப்பு முறையில் நவ.23 / 24 – 2019 கிருட்டினகிரியில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தின் முன்னோடிச் செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர், திரைஉலகினர், ஊடகவிலாளர்கள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களின் தோழர்கள் என ஒட்டு மொத்தத் தமிழ்ச்சமூகத்தின் சங்கமமாக இந்நிகழ்வு திகழ்ந்தது.
சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாத குடும்பமாகப் பேரறிவாளன் இல்லம் அமைந்திருப்பதை அப்பொழுது காண முடிந்தது.
பறை இசை என்பது சாதியின் இழிந்த குறியீடாகக் கருதப்படுவதைத் தகர்த்தெறியும் வண்ணம், பறை முழக்கத்துடன் இத்திருமணம் நடந்தேறியது ஒரு பண்பாட்டுப் புரட்சி ஆகும்.
சாதிக்கும், சாவுக்கும் என ஒதுக்கப்பட்ட பறை இசையின் இழிவைச் சிறந்த எடுத்துக் காட்டு மூலம் மெய்ப்பித்து, பறை இசையைக் கெளரவித்த இக்குடும்பத்தினரைத் தமிழகம் வாழ்த்துகிறது.
இத்திருமண நிகழ்வில் திரண்ட கூட்டம், அற்புதம் அம்மா – குயில் தாசன் – பேரறிவாளன் ஆகியோர் மீது தமிழகம் கொண்டிருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இந்த இனிய விழாவில் காவல்துறையினர் கொடுத்த இடையூறு களைந்த ஒத்துழைப்பு போற்றத்தக்கது.
அதே சமயம், பேரறிவாளனுக்குத் தற்பொழுது தரப்பட்ட சிறைவிடுப்பை (பரோல்) தொடர்ந்து நீட்டித்தால், தமிழக அரசுக்கு மக்கள் நன்றி செலுத்துவார்கள்.
-கண.குறிஞ்சி