கொரோனா பயம் போயே போச்சு – தொற்று இருந்த பெண்ணை துணிவுடன் மணந்த வாலிபர்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லியைச் சேர்ந்த இளைஞருக்கும் மே 24 ஆம் தேதி (நேற்று) கெங்கவல்லியில் திருமணம் செய்வதற்கு, அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த சனவரி மாதம் நிச்சயம் செய்திருந்தனர்.

திருமணத்துக்காக மணப்பெண், அவரது பெற்றோர் உள்ளிட்டோர் காரில் கெங்கவல்லிக்கு புறப்பட்டனர். சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலை அடுத்த நத்தக்கரை சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை நடத்தினர்.

நேற்று முன்தினம் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மணப்பெண்ணுக்கு அறிகுறிகள் ஏதுமின்றி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து, மணப்பெண்ணுக்கு சிகிச்சை முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினர்.

ஆனால், நிச்சயித்த திருமணத்தை ஒத்திவைப்பது, தடையாக இருக்கும் என்றுகூறி, திருமணத்தை நடத்த அனுமதிக்கும்படி, மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். திருமணத்துக்கு மணமகனும் சம்மதிக்கவே, இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இளம்பெண்ணின் எதிர்கால வாழ்க்கையின் நலன்கருதி, ஆட்சியரும் சில நிபந்தனைகளுடன் திருமணத்துக்கு அனுமதியளித்தார். அதன்படி, மணமக்கள், அவர்களது பெற்றோர் உள்ளிட்ட ஒரு சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து மணமகன் உரிய இடைவெளியுடன் நின்று மணப்பெண் கழுத்தில் தாலி கட்டினார். வேத விற்பன்னர் மந்திரம் ஓத, எந்தவித பரபரப்பும் இன்றி 10 நிமிடங்களில் இந்தத் திருமணம் நடைபெற்று முடிந்தது. பின்னர் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த 50 பேருக்கு மட்டும் உணவு பரிமாறப்பட்டது.

திருமணத்துக்குப் பின்னர் மணப்பெண்ணை, அவரது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தி, தொற்றுக்கான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மணமகன் உள்ளிட்ட திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கெங்கவல்லியில் கொரோனா தொற்று உள்ள பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. புதுப்பெண் என்பதால் தற்போது அவரை வீட்டில் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

கொரொனா என்றாலே அதிர்ந்து அஞ்டி ஓடி ஒளிந்த காலம் போய் கொரோனா என்று சொன்ன பிறகும் ஒரு திருமணமே நடந்து முடிந்திருப்பது கொரோனா மீதான பயம் மக்களுக்கு சுத்தமாக இல்லை என்பதன் வெளிப்பாடுதான் என்கின்றனர்.

Leave a Response