ஏற்கெனவே பெரும்கடனாளி இதில் வாஷிங்மெசின் வாங்கப் பணம் ஏது? – சீமான் கேள்வி

ஏப்ரல் 06 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தொடர் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சீமான் இன்று (15-03-2021) பிற்பகல் 2 மணியளவில் திருவொற்றியூர் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் வர வாய்ப்பிருக்கிறதா?

சரியான, சமமான, தரமான கல்வி இலவசம். உலகத் தரத்தில் கல்வி அளிப்பேன். தென்கொரியாதான் கல்வித் தரத்தில் முதலிடத்தில் உள்ளது. அதை உறுதியாகத் தாண்டுவதற்கு திட்டம் வைத்திருக்கிறேன். உயிர் காக்கும் மருத்துவம் விற்பனைக்கு அல்ல. தனியாரும் மருத்துவமனை நடத்தட்டும். ஒரு ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை என் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் கொடுப்பேன். தூய குடிநீர் தருவேன். தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவேன்.

வாஷிங் மெஷின் தருவோம் என அதிமுக கூறியுள்ளதே?

6 இலட்சம் கோடி கடன் இருக்கிறது. 2 கோடிக்கு மேல் குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஒரு வாஷிங் மெஷின் ரூ.15 ஆயிரம் என வைத்துக்கொண்டால், பணம் எங்கிருந்து கொண்டு வருவீர்கள்? எங்கிருந்து பணம் வரும் என்பதற்கு திட்டத்தை வகுத்துச் சொல்லுங்கள். பொருளாதாரத்தைப் பெருக்கி அங்கிருந்து மக்களுக்குக் கொடுப்போம் எனச் சொல்லலாமே. தமிழக அரசில் எந்தத் துறையில் கடன் இல்லாமல் இருக்கிறது? நாட்டையும் நாட்டு மக்களையும் கடனாளியாக்கிவிட்டு, மறுபடியும் மறுபடியும் இலவசம் தருவோம் என வெற்று அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response