அலட்சியம் செய்த அதிமுக அவமதித்த பாசக – மனம் நொந்த டி.ராஜேந்தர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை வைத்திருக்கும் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் என்ன செய்கிறார்?

அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை. அதேசமயம் அரசியல் வட்டாரங்களில் உலவும் தகவல் ஆச்சரியமளிக்கிறது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துள்ளார். அப்போது அதிமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புக்குப் போட்டியிட வாய்ப்புக் கேட்டாராம். அதற்கு, எல்லாம் முடிந்துவிட்டது நீங்கள் மிகத் தாமதமாக வந்துவிருக்கிறீர்கள் என்று சொன்ன ஓபிஎஸ், தேவைப்பட்டால் தேர்தல் பரப்புரைக்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டாராம்.

அச்சந்திப்புக்குப் பின் சில நாட்கள் காத்திருந்த டி.ராஜேந்தருக்கு அதிமுக தரப்பிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லையாம்.

அதனால், தமிழக பாரதியசனதாக்கட்சி அலுவலகத்துக்கே சென்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் முருகனைச் சந்தித்திருக்கிறார். வரவேற்பறையிலேயே அவரைப் பார்த்துப் பேசிய முருகன், நான விமானத்துக்குச் செல்ல வேண்டும் நேரமாகிவிட்டது எனவே என்ன பேசவேண்டுமோ அதைப் பிறிதொருநாள் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

இதனால் மனம் நொந்து திரும்பிவிட்டார் டி.ராஜேந்தர் என்று சொல்கிறார்கள்.

எப்படியிருந்தவர் இப்படியாகிவிட்டாரே? என்று விசயமறிந்தவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

Leave a Response