தமிழ்த்தேசியப் பண்டுவர் செ.நெ.தெய்வநாயகம்

பண்டுவர் செ.நெ.தெய்வநாயகம் பிறந்த நாள் (1942)

செ. நெ. தெய்வநாயகம் (நவம்பர் 15,1942-நவம்பர் 19, 2012) ஒரு மருத்துவ அறிஞராகவும் சித்த மருத்துவத்தில் தேர்ந்தவராகவும் தமிழ்த் தேசியவாதியாகவும் விளங்கியவர்.இவருடைய பாட்டனார் சி.டி.நாயகம் என்பவர் 1938 இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் செ.நெ.தெய்வநாயகம். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 1981-ஆம் ஆண்டு நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவை ஏற்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

1986 இல் பிப்பிரவரித் திங்களில் அணு உலையினாலும் அணுக்கதிர் வீச்சாலும் விளையக்கூடிய இடர்களை அறிவியல் அடிப்படையில் மக்களிடையே பரப்புவது என்று மருத்துவர் தெய்வநாயகமும் பிற நல்லறிஞர்களும் முடிவு செய்து அவ்வாறே தமிழ் நாடு முழுவதும் பயணம் செய்து பரப்புரை ஆற்றினர். மரபணு மாற்றுப் பயிர் எதிர்ப்பு, புகையிலை எதிர்ப்பு, மது ஒழிப்பு எனப் பல குமுகச் சிக்கல்களையும் எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

இந்திய அரசின் துணையோடு, சி்ங்கள இனவெறி அரசு, தமிழின அழிப்புப் போர் நடத்திய 2008-2009ஆம் ஆண்டுகளில், போர் நிறுத்தம் கோரியோ, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தோ, பொதுக் கூட்டங்கள் நடத்த சென்னையில் தி.மு.க. அரசு அனுமதி மறுத்தது. அப்போது, தனது தியாகராயர் நகர் செ.தெ. நாயகம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டங்களையும், தமிழின உணர்வுக் கூட்டங்களையும் நடத்த இசைவு தந்தார். இந்த வகையில் தமிழினத்திற்கு ஆதரவான கருத்துப் பரப்பலுக்குப் பெருந்துணையாய் நின்றார்.

– நிலா.வேங்கடவன்

Leave a Response