சாரணர் இயக்கத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது – எச்.ராஜா படுதோல்வி

தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.

பல்வேறு கூட்டங்களின் பின் எடுக்கப்பட்ட முடிவின்படி, தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 16ம் தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குனர் பி.மணியும் போட்டியிட்டனர்.தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு அரசியல்வாதி ஒருவர் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும். பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா களமிறங்கியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. தொடர்ந்து ராஜா, இந்தப் பதவிக்குப் போட்டியிடும் அறிவிப்பு வெளியானவுடன் அவருக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சியின் தலைவர்களும் தொடர் அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.

இன்று காலையிலிருந்து வாக்குப்பதிவு நடைபெற்று தேர்தல் முடிவுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தோல்வியடைந்தார்.

ராஜாவை எதிர்த்துப் போட்டியிட்ட பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணி அமோக வெற்றி பெற்றார்.மொத்தம் பதிவான வாக்குகளில் மணி, 234 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜா, வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

Leave a Response