சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற்றன.
2015-ம் ஆண்டு தொடங்கிய இந்த அகழ்வாராய்ச்சியில் 2,500க்கும் பழமையான தொல்லியல் பொருட்களும், பண்டைய நாகரிகங்களும் கண்டறியப்பட்டன. இந்நிலையில் மூன்றாம் கட்ட ஆராய்ச்சிப் பணி தொடங்காமல் உள்ளது.
கீழடியில் அகழ்வாய்வை நிறுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் இவ்விசயத்தில் தமிழ்மக்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசையும்,அக்கறையற்று இருக்கும் மாநில அரசையும் கண்டித்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,
கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட 10 மாதிரிகளில் 2 மாதிரிகளை மற்றுமே இந்திய அரசு சோதனை செய்துள்ளது, நிதியைக் காரணம் காட்டி ஆய்வைத் தள்ளிப்போடுகிறது மத்திய அரசு.
நவோதயா பள்ளி கொண்டு வந்தால் தமிழகத்திற்கு ரூ.640 கோடி தருகிறோம் என்று கூறும் மத்திய அரசிடம் தமிழின் தொன்மை பற்றி ஆராய நிதி இல்லையா?. இது தமிழரின் தொன்மைக்கான போராட்டம். மூன்றாம் கட்ட ஆய்வு வைகைக் கரையோரம் முழுவதும் நடத்த வேண்டும் என்றும் கீழடியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும். தமிழக அரசு ஆராய்ச்சிக்காக இடமும், ஒரு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியும் மத்திய அரசு தமிழரின் பண்டைய நாகரிகங்களை அழிக்க முயற்சி செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.