சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதியார் சொன்னதைச் சிரமேற்கொண்டு முதல்படத்திலிருந்தே செய்துகொண்டிருக்கும் மிஷ்கின், இந்தப்படத்திலும் அதையே செய்திருக்கிறார். ஆங்கிலப்படங்கள் மற்றும் புதினங்களில் அடித்துத் துவைத்துக் காயப் போட்ட துப்பறியும் கதைகளின் ஒருதுளிதான் இந்தப்படம்.
நுண்ணறிவு கொண்ட துப்பறிவாளன் கணியன் பூங்குன்றன் வேடத்தில் விஷால் நடித்திருக்கிறார். கொடுத்த வேடத்துக்கு நியாயமாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார்.ஆனால் மிஷ்கினின் உடல்மொழியில் விஷாலைப் பார்ப்பது சோதனையாகத்தான் இருக்கிறது.
பணத்துக்காக ஒரு வேலையை ஒப்புக்கொள்ளாமல் நியாயம் இருந்தால் மட்டுமே அந்த வழக்கை எடுத்துக்கொள்வார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை. இப்படித் தொடங்கி திரைநாயகர்கள் செய்யும் எல்லா சித்துவிளையாட்டுகளையும் கணியனும் செய்கிறார்.
பெரும்பணக்காரர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்ல அவரை முதுகைப் பிடித்து வெளியில் தள்ளிவிட்டு,அடுத்த காட்சியிலேயே, ஒரு பள்ளிச்சிறுவன் தரும் எண்ணூத்திச் சொச்சம் சில்லறைக் காசுக்களுக்காக ஒரு நாய் கொலையை கண்டுபிடிக்க உள்ளே நுழைகிறார் நாயகன்.
அதற்குள் போனால் அதோடேயா நின்றுவிடும்? ஒரு தொழிலதிபர், ஓர் உயர்காவலதிகாரி ஆகியோருடைய கொலைகளும் அதற்குள் அடங்குகின்றன. அவற்றைத் தன் நுண்ணறிவால் நாயகன் துலக்குமுன்பே எதிர்மறை நாயகன் இவரைப் பற்றித் துலக்கிவிடுகிறார்.அதனால் பல மரணங்கள். சில கொடூரமாக இருக்கின்றன. கடைசியில் நாயகன் வெல்லவேண்டும் என்பதால் இவர் வெல்லுகிறார்.
இந்தக்கதையை தன்னுடைய பாணியில்,அதாவது, முதல்படத்தில் பார்த்து வியந்து அப்புறம் சலித்து அதன்பின் அயர்ந்திருக்கும் போதும் நான் எப்பவுமே மாறமாட்டேன் அதேபாணியில்தான் கதை சொல்வேன் என்று பிடிவாதமாகச் சொல்லி நம்மைச் சோதிக்கிறார் மிஷ்கின்.
விஷாலின் நண்பராக பிரசன்னா, காதலியாக அனு ஆகியோர். நாயகி அனு கண்களில் பாவம் காட்டுகிறார். வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ்,ஜான்விஜய், ஷாஜி உட்பட எல்லோரும் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் பாடலே இல்லை என்பது பலவீனம்.
எல்லோருமே புத்திசாலிகள் என்பதும் எல்லோருமே மிஷ்கின் போலவே நடிக்கிறார்கள் என்பதும் தாங்கமுடியவில்லை, கடைசிக்காட்சியில் விஷால் வீட்டுக்குள் ஷாஜி ஓடிவரும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். அது பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய சிரிப்பல்ல.
அது கெளரவமல்ல அகெளரவம், பிரபாகரன், காரல்மார்க்ஸ், புத்தர் முன்னிலையில் சண்டை என்று தனக்கான அடையாளமாகச் சிலவற்றை மிஷ்கின் செய்திருக்கிறார். அவை போதுமானதல்ல.